பெண் வாடிக்கையாளர் வீட்டிற்குள் சிறுநீரை ஊற்றிய 'ரேபிடோ' ஊழியர்
பெண் வாடிக்கையாளர் வீட்டிற்குள் சிறுநீரை ஊற்றிய 'ரேபிடோ' ஊழியர்
ADDED : செப் 27, 2026 11:08 PM
பெங்களூரு: வாடிக்கையாளர் வீட்டினுள், சிறுநீரை ஊற்றிய, 'ரேபிடோ' ஊழியரை போலீசார் தேடுகின்றனர்.
பெங்களூரில் வசிக்கும் ஸ்ரீஷா என்ற பெண் தனது, 'எக்ஸ்' வலைதள பக்கத்தில், 'நான் ஆர்டர் செய்த பொருளை எடுத்து வர ரேபிடோ ஊழியரான சிவா ரெட்டி என்பவர் தாமதமாக்கினார்.
இதுபற்றி அவரிடம் கேட்டேன். என் வீட்டின் கேட் முன்பு வந்ததும், மொபைல் போனில் என்னிடம் பேசிய அவர், என்னை ஆபாசமாக திட்டினார். அவருக்கு பயந்து கதவை திறக்கவில்லை. தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை கேட் வழியாக வீட்டிற்குள் ஊற்றிவிட்டு சென்றார்.
'எனக்கு, 'வாட்ஸாப்'பில் அனுப்பிய ஆடியோவில், 'சிறுநீரை தண்ணீர் பாட்டிலில் பிடித்து வந்து உனது வீட்டின் முன்பு ஊற்றி உள்ளேன். அதை சோப்பு தண்ணீர் என நினைக்க வேண்டாம்' என்று கூறினார். இந்த சம்பவம் நடந்த போது வீட்டில் தனியாக இருந்தேன். அதிர்ஷ்டவசமாக நான் கதவை திறக்கவில்லை. திறந்திருந்தால் எனது நிலை என்ன என்று நினைத்து பார்க்கவே பயமாக உள்ளது' என குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனரையும், 'டேக்' செய்திருந்தார். இதனை கவனித்த பெங்களூரு நகர போலீசார், சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும்படி, ஸ்ரீஷாவுக்கு அறிவுறுத்தினர். அவர் அளித்த புகாரில், ரேபிடோ ஊழியரை போலீசார் தேடுகின்றனர்.
