ADDED : ஏப் 06, 2026 04:44 AM
பெங்களூரு: கடலோர மாவட்டங்களில் எலி காய்ச்சலால், மூன்று ஆண்டுகளில் 1,700 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
இது குறித்து, சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை:
கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் எலி காய்ச்சலால் 1,700 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில், உடுப்பி முதலிடத்தில் இருக்கிறது.
ஆண்டுதோறும் ஏற்படும் பருவமழையின் போது, ஏற்படும் வெள்ளத்தின் போது எலிகள், தங்கள் வலைகளில் இருந்து வெளியேறுகின்றன.
இந்த சமயங்களில் எலிகளால் நோய்த்தொற்று பரவும் அபாயம் அதிகமாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட எலிகளின் சிறுநீர் கலந்த நீர் உடலில் நேரடியாக படும் போது எலிக்காய்ச்சல் ஏற்படும்.
எலி காய்ச்சல் ஏற்படாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த நோயை முழுமையாக குணப்படுத்த முடியும்.
திடீரென கடுமையான காய்ச்சல், குளிர்காய்ச்சல், கண்கள் சிவப்பாவது, வயிற்றுப்போக்கு போன்றவை அறிகுறிகள். இது போன்றவற்றால் அவதிப்படுவோர் தாமதிக்காமல் மருத்துவரை சந்திக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
