/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரெட்டி - ஸ்ரீராமுலு திடீர் மவுனம்
/
ரெட்டி - ஸ்ரீராமுலு திடீர் மவுனம்
ADDED : நவ 12, 2025 07:50 AM

பெங்களூரு: கர்நாடக பா.ஜ., மூத்த தலைவர்களான ஜனார்த்தன ரெட்டி, ஸ்ரீராமுலு ஆகியோர், தீவிர அரசியலில் இருந்து, திடீரென ஒதுங்கி உள்ளனர்.
பல்லாரி அரசியல் என்றாலே ஜனார்த்தன ரெட்டி, ஸ்ரீராமுலுவுக்கு தனி இடம். பல ஆண்டு நண்பர்களாக இருந்த, இவர்கள் இடையே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசியல்ரீதியாக பிரச்னை ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை கூறினர்.
ஆறு மாதங்களுக்கு மேல் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. பல்லாரியில் முக்கிய அரசியல் புள்ளிகளான, இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையை தீர்க்க, பா.ஜ., மேலிடம் முன்வந்தது. மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா மூலம் பேச்சு நடக்க இருந்தது. ஆனால் அதற்கு முன்பே, இருவரும் மீண்டும் ஒருங்கிணைந்தனர்.
ஒரு சில கட்சி நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக தோன்றினர். அதன்பின் என்ன ஆனது என்றே தெரியவில்லை. இருவரையும் ஒன்றாக பார்க்க முடியவில்லை. இதுபோல இருவரும் தீவிர அரசியல் நடவடிக்கையில் இல்லாமல் ஒதுங்கியே உள்ளனர்.
கட்சியில் முன்பு கிடைத்தது போன்ற மரியாதை தனக்கு கிடைப்பது இல்லை என்று நினைத்து, ஜனார்த்தன ரெட்டி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தேர்தலில் தோற்றதால், ஸ்ரீராமுலுவின் மவுசும் குறைந்திருப்பதால், கட்சியில் அவருக்கு அதிக முக்கியத்துவம் இல்லை. அதனால் அவரும் 'சைலண்ட்' ஆகிவிட்டதாக, ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

