ரேணுகாசாமி கொலை வழக்கில் 'அப்ரூவர்' பிரதோஷ் வாக்குமூலம் அளிக்க உத்தரவு
ரேணுகாசாமி கொலை வழக்கில் 'அப்ரூவர்' பிரதோஷ் வாக்குமூலம் அளிக்க உத்தரவு
ADDED : ஆக 28, 2026 11:21 PM

பெங்களூரு: 'சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் அப்ரூவராக மாறியுள்ள பிரதோஷ், செப்., 2ம் தேதி வாக்குமூலம் அளிக்க வேண்டும்' என, நீதிமன்றம் உத்தரவிட்டது.
சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ர கவுடா உட்பட 17 பேர் சிறையில் உள்ளனர். இவர்களில் ஒருவரான பிரதோஷ் அப்ரூவராக மாற முடிவெடுத்தார். இதற்கு அனுமதி அளிக்குமாறு, 59வது சிட்டி சிவில் கோர்ட்டில் மனு அளித்தார்.
இம்மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பிரதோஷை அரசு தரப்பு சாட்சியாக, கடந்த 25ம் தேதி அறிவித்தது. அதே சமயம், ஏதேனும் உண்மையை மறைத்தால், மீண்டும் குற்றவாளியாக பிரதோஷ் மாற்றப்படுவார் எனவும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், வரும் செப்டம்பர் 2ம் தேதி பிரதோஷ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு நீதிபதி சுஜாதா நேற்று உத்தரவிட்டார்.
