/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஈரானில் கர்நாடக மாணவர்கள் மீட்க அரசிடம் கோரிக்கை
/
ஈரானில் கர்நாடக மாணவர்கள் மீட்க அரசிடம் கோரிக்கை
ADDED : ஜூன் 17, 2025 08:04 AM
ஈரானில் மருத்துவம் படிக்கும் சிக்கபல்லாபூரை சேர்ந்த ஏழு மாணவர்கள், தங்களை மீட்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரான் - இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இரு நாடுகளும் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால், இரு நாட்டு மக்களும் அச்சத்தில் உள்ளனர். ஈரானில் இந்தியர்கள் பலரும் சிக்கித் தவிக்கின்றனர். பலரும் தங்களை மீட்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கைகள் வைத்து வருகின்றனர்.
அவ்வகையில், ஈரானின் தலைநகரான டெஹ்ரானில் மருத்துவம் படித்து வரும் கர்நாடகா, சிக்கபல்லாபூர் மாவட்டம், அல்லிபுரா கிராமத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்கள், நேற்று 'எக்ஸ்' வலைதளத்தில், 'எங்களை மத்திய, மாநில அரசுகள் மீட்க வேண்டும்' என, பதிவிட்டனர்.
அவர்களில் ஒருவரான நதீம் ஹூசைன் என்ற மாணவர், பெங்களூரில் உள்ள வெளிநாட்டு வாழ் இந்திய குழுவை தொடர்பு கொண்டு, உதவி கோரினார்.
இதையறிந்த அக்குழுவின் துணை தலைவர் டாக்டர் ஆர்த்தி கிருஷ்ணா, ஈரானில் உள்ள மாணவர்களை இந்தியாவிற்கு உடனடியாக அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி உள்ளார்.
- நமது நிருபர் -