/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரின் கோவில்களில் வருவாய் கடும் சரிவு
/
பெங்களூரின் கோவில்களில் வருவாய் கடும் சரிவு
ADDED : ஏப் 22, 2025 05:19 AM
பெங்களூரு: பெண்களுக்கு இலவச பஸ் பயணத்துக்கு வாய்ப்பளிக்கும், 'சக்தி' திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், கர்நாடகாவில் பல்வேறு கோவில்களின் வருவாய் ஏறுமுகமாகிறது. ஆனால் பெங்களூரு கோவில்களில் வருவாய் குறைந்துள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு வந்தவுடன், ஐந்து வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தியது. இவற்றில் 'சக்தி' திட்டம் முதலில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர். குடும்பத்துடன் திருத்தலங்களுக்கு செல்கின்றனர்.
இதனால் தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலா, குக்கே சுப்ரமண்யர்; மைசூரின் சாமுண்டீஸ்வரி, நஞ்சன்கூடின் ஸ்ரீகண்டேஸ்வரர்; பெலகாவியின் ரேணுகா எல்லம்மா; சாம்ராஜ்நகரின் மலை மஹாதேஸ்வரா; உடுப்பியின் கொல்லுார் மூகாம்பிகை என மாநிலத்தின் முக்கிய கோவில்களின் வருவாய் அதிகரிக்கிறது.
ஆனால் பெங்களூரின் கோவில்களின் வருவாய் குறைந்துள்ளது. அதிகமான பெண்கள் வெளி மாவட்டங்களின் கோவில்களுக்கு செல்வதே, இதற்கு காரணம். பெங்களூரின் முக்கிய கோவில்களில் பெண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஹிந்து அறநிலையத்துறையின் ஆண்டு அறிக்கைப்படி, கர்நாடகாவின் மற்ற மாவட்ட கோவில்களின் வருவாய் அதிகரித்துள்ளது. ஆனால் பெங்களூரின் கோவில்களில் வருவாய் குறைந்துள்ளது.
கடந்த 2023 ஆண்டுடன் ஒப்பிட்டால், 2024ல் வருவாய் குறைந்துள்ளது. பெங்களூரின், கே.ஆர்.மார்க்கெட் அருகில் உள்ள கோட்டை பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோவில், கவிபுரத்தின் கவி கங்காதேஸ்வரா, பானஸ்வாடியின் ஆஞ்சனேயர், மல்லேஸ்வரத்தின் லட்சுமி நரசிம்மசுவாமி, வசந்த நகரின் வசந்த வல்லபராய சுவாமி கோவில் உட்பட பல்வேறு கோவில்களின் வருவாய் குறைந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.