/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பணத்தை டாலராக மாற்றுவதாக ரூ.2 கோடி துணிகர கொள்ளை
/
பணத்தை டாலராக மாற்றுவதாக ரூ.2 கோடி துணிகர கொள்ளை
ADDED : ஜூன் 27, 2025 11:19 PM
வித்யரண்யபுரா: பணத்தை டாலராக மாற்றுவதாக கூறி, இரண்டு கோடி ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு, கெங்கேரியை சேர்ந்தவர் ஸ்ரீஹர்ஷா, 30. எம்.பி.ஏ., பட்டதாரியான இவர், சமையல் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை துவங்க திட்டமிட்டு இருந்தார். எண்ணெய் தயாரிக்க ஜெர்மனியில் இருந்து இயந்திரம் வாங்க முயற்சி செய்து வருகிறார்.
வங்கிகள், நண்பர்களிடம் இருந்து இரண்டு கோடி ரூபாய் கடன் வாங்கினார். பணத்தை டாலராக மாற்றி, ஜெர்மனிக்கு அனுப்ப ஏற்பாடு செய்திருந்தார்.
ஸ்ரீஹர்ஷாவுக்கு நண்பர் ஒருவர் மூலம், வித்யரண்யபுராவில் வசிக்கும் பெஞ்சமின், 33, என்பவர் அறிமுகம் கிடைத்தது. கமிஷன் அடிப்படையில் பணத்தை டாலராக மாற்றும் நிறுவனத்தை பெஞ்சமின் நடத்தினார். தன்னிடம் இருக்கும் இரண்டு கோடி ரூபாயை டாலராக மாற்றித் தரும்படி பெஞ்சமினிடம், ஸ்ரீஹர்ஷா கேட்டார். இதற்கு பெஞ்சமினும் ஒப்புக் கொண்டார்.
கடந்த 25ம் தேதி மதியம் 2:00 மணிக்கு பெஞ்சமின் அலுவலகத்திற்கு இரண்டு கோடி ரூபாய் பணத்துடன், ஸ்ரீஹர்ஷா, அவரது நண்பர்கள் நாகேந்திரா, சாந்தகுமார் சென்றனர்.
இரண்டு கோடி ரூபாயை பெஞ்சமினும், அவரது நிறுவன ஊழியரும் எண்ணிக் கொண்டு இருந்தனர்.
அப்போது நிறுவனத்திற்குள் நுழைந்த ஏழு பேர் கொண்ட கும்பல் பெஞ்சமின், ஸ்ரீஹர்ஷா உள்ளிட்டோரை கத்திமுனையில் மிரட்டியது. இரண்டு கோடி ரூபாய், நான்கு மொபைல் போன்களை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து காரில் தப்பிச் சென்றது.
அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் பெஞ்சமினும் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார். அவரை மீண்டும் ஸ்ரீஹர்ஷாவால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் இந்த கொள்ளையில் பெஞ்சமினுக்கும் பங்கு இருப்பதாக ஸ்ரீஹர்ஷாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
பணம் கொள்ளை போனது குறித்து ஸ்ரீஹர்ஷா அளித்த புகாரில் பெஞ்சமின் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து, வித்யரண்யபுரா போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் தாமதமாக நேற்று வெளியானது.