ரூ.240 கோடி போதை பொருட்கள் 6 மாதங்களில் பெங்களூரில் பறிமுதல்
ரூ.240 கோடி போதை பொருட்கள் 6 மாதங்களில் பெங்களூரில் பறிமுதல்
UPDATED : அக் 15, 2026 12:00 AM
ADDED : அக் 14, 2026 11:44 PM

பெங்களூரு: ‘‘பெங்களூரில் கடந்த ஆறு மாதங்களில், 230 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது,’’ என, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
இந்தாண்டு, ஏப்ரல் முதல், செப்டம்பர் இறுதி வரை ஆறு மாதங்களில், 230 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில், போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ், 3,425 வழக்குகள் பதிவாகி உள்ளன. இவற்றில் 2,951 வழக்குகள் நுகர்வோர் மீதும், 474 வழக்குகள் அவற்றை விற்பனை செய்தவர்கள் மீதும் பதிவாகி உள்ளன.
விமானம், ரயில், சாலை போக்குவரத்து, வெளிநாட்டு பார்சல், கூரியர் சேவைகள் ஆகியவை கடத்தல்காரர்களால் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.
தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்காவின் பல்வேறு நாடுகளில் இருந்து, போலி முகவரிகளை பயன்படுத்தியும், வெளிநாடுகளில் இருந்தும் கூரியர்கள் மூலம் போதைப்பொருள் நகருக்குள் கொண்டு வரப்படுகின்றன.
ஒடிஷா, ஆந்திரா, டில்லியில் இருந்து சாலை, ரயில் வழியாக கஞ்சா, போதைப்பொருள் வினியோகம் செய்வது கண்டறியப்பட்டு உள்ளது.
புலனாய்வாளர்களிடம் இருந்து தப்பிக்க, ஆன்லைன் உணவு பொட்டலங்கள், பரிசு பொருட்களுக்குள் போதை பொருட்களை மறைத்து வழங்குவதும் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களின் ஊழியர்களே போதைப்பொருள் விற்பனையாளர்களின் இலக்கு. படிப்பு, வேலைக்காக வரும் வெளிநாட்டு மாணவர்கள், எளிதாக பணம் சம்பாதிக்கும் நோக்கில் அல்லது போதைக்கு அடிமையாகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த நெட் ஒர்க்கில் சிக்கிக் கொள்கின்றனர்.
இவ்வாறு கூறினார்.
