ADDED : செப் 06, 2026 11:23 PM
ராம்நகரின் பிடதி தாலுகாவில் உள்ள ஒன்பது கிராமங்களில் 9,600 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி ஒருங்கிணைந்த டவுன்ஷிப் அமைக்க, அரசு முடிவு செய்துள்ளது.
திட்டத்தை செயல்படுத்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட உள்ளன. பசுமை காடுகள் அழியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள், திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர்.
எதிர்ப்புக்கு மத்தியிலும் நிலம் கையப்படுத்துவதற்கான அறிவிப்பை அரசு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. திட்டத்தை கண்டித்து, ம.ஜ.த., சார்பில் பாதயாத்திரையும் நடந்தது.
ஆனாலும் டவுன்ஷிப் திட்டத்தை ஏற்று கொண்டு, அதற்காக தங்கள் நிலத்தை கொடுத்த சில விவசாயிகளுக்கு, அரசு சார்பில் இழப்பீடு வழங்கும் பணி நடக்கிறது. ஒரு ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
நிவாரண தொகை இதை பயன்படுத்தி கொண்டு, போலி ஆவணங்கள் சமர்ப்பித்து, நான்கு பேர் பணம் பெற முயன்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, ராம்நகரில் வசிக்கும் சங்கர ரெட்டி, கிருஷ்ண ரெட்டி, வெங்கடேஷ், ராஜசேகர் ஆகியோர், 'பிடதி டவுன்ஷிப் திட்டத்திற்காக நாங்களும் நிலம் கொடுத்துள்ளோம். இதற்கு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும்' என்று, பிடதி டவுன்ஷிப் திட்டத்தை செயல்படுத்த உள்ள பெருநகர பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தில், கடந்த 1ம் தேதி ஆவணங்கள் வழங்கினர்.
அந்த ஆவணத்தில், பிடதி துணை வட்டாட்சியரின் டிஜிட்டல் கையொப்பம் கொண்ட குடும்ப மரபு சான்றிதழ்கள், கஞ்சுகரனஹள்ளி கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்பட்டதாக கூறப்படும் கடிதம், புகைப்படம் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.
கடந்த, 3ம் தேதி ஆணைய அதிகாரிகள், ஆவணங்களை பரிசீலனை செய்த போது, அவை போலியானவை என்று தெரிந்தது. துணை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் எந்த ஆவணங்களும் வழங்கவில்லை என்றும் உறுதி செய்யப்பட்டது.
விவசாயிகள் எச்சரிக்கை இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது:
பிடதி டவுன்ஷிப் திட்டத்திற்காக, ஒரு ஏக்கருக்கு அரசு கோடிக்கணக்கில் விவசாயிகளுக்கு பணம் வழங்குகிறது என்பதால், நிலம் வழங்கியதாக கூறி, போலி ஆவணங்கள் தாக்கல் செய்து, 5 கோடி ரூபாய் வரை பெற்று, மோசடி செய்ய, நான்கு பேர் கும்பல் முயன்றதை கண்டுபிடித்து உள்ளோம்.
அவர்கள் மீது அளிக்கப்பட்ட புகாரில் மோசடி, ஆள்மாறாட்டம் உட்பட நான்கு பிரிவுகளில், பிடதி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவாகி உள்ளது.
அதிக பணம் கிடைக்கிறது என்பதால் உயிரிழந்த விவசாயிகள் பெயர்களில் பணம் பெற கும்பல் முயற்சிக்கலாம் என்பதால், எச்சரிக்கையாக இருக்கும்படி விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
பிடதி போலீசார் கூறுகையில், 'மோசடி செய்ய முயன்ற நான்கு பேரும் ராம்நகரை சேர்ந்தவர்கள் இல்லை. தபாஸ்பேட்டில் வசிப்பவர்கள். தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகிறோம். இவர்கள், நான்கு பேர் மட்டும் தானா அல்லது மேலும் பலர் உள்ளனரா என விசாரணை நடக்கிறது.
'இத்தகைய கும்பலிடம் விவசாயிகள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். யாராவது நிலத்திற்கு பணம் வாங்கி தருகிறோம் என்று தொடர்பு கொண்டால், அவர்களை நம்பி ஆவணங்கள் எதுவும் கொடுத்து விட வேண்டாம்' என்றனர்.
