ADDED : ஜூலை 07, 2026 03:59 AM

பெங்களூரு: ''பெங்களூரில் 200 கி.மீ., துார நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதுடன், சேதமடைந்த நடைபாதையை, 70 கோடி ரூபாயில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது,'' என பெங்களூரு நகர்ப்புற துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா தெரிவித்தார்.
பெங்களூரு நகரில் நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதை தவிர்க்கும் வகையில், 'ஜூலை 1ம் தேதி முதல் நடைபாதைகளில் கடைகள் இருக்கக் கூடாது. இருந்தால், அகற்றப்படும்' என்று அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா எச்சரித்திருந்தார்.
அதன்படி, ஜூலை 1 முதல் நகரில் பல இடங்களில் நடைபாதையை ஆக்கிரமித்திருந்த கடைகள், தள்ளுவண்டிகள் அகற்றப்பட்டன. இதை வரவேற்று முதல்வர் சிவகுமாரும் தனது, 'எக்ஸ்' தளத்தில், 'மூன்று நாட்களில் 200 கி.மீ., துார நடைபாதைகள் மீட்கப்பட்டு உள்ளன' என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா, 'எக்ஸ்' தளத்தில், 'ஆக்கிரமிப்புகள் அகற்றுவது மட்டுமல்ல, பாதசாரிகள் சுலபமாக நடக்கும் வகையில் நடைபாதையை சீரமைக்க, 70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன' என குறிப்பிட்டு உள்ளார்.
