/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் வெற்றியுடன் நிறைவு; 17 மாவட்டங்களில் அமைதியாக நடந்தது
/
ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் வெற்றியுடன் நிறைவு; 17 மாவட்டங்களில் அமைதியாக நடந்தது
ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் வெற்றியுடன் நிறைவு; 17 மாவட்டங்களில் அமைதியாக நடந்தது
ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் வெற்றியுடன் நிறைவு; 17 மாவட்டங்களில் அமைதியாக நடந்தது
ADDED : அக் 27, 2025 03:48 AM

பெங்களூரு: கர்நாடகாவின் 17 மாவட்டங்களில், ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் வெற்றியுடன் நடந்து முடிந்தது. எந்த அசம்பாவிதங்களும் ஏற்படாமல், போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தனர்.
ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், மாநில அளவில் ஊர்வலம் நடத்த திட்டமிட்டது. ஆனால் கலபுரகி, யாத்கிரில் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. எனவே மாநிலத்தின், 17 இடங்களில் நேற்று எந்த இடையூறுகளும் இல்லாமல், ஊர்வலம் நடந்தது.
முன்னெச்சரிக்கை கோலார் மாவட்டத்தின் மாலுார்; சிக்கபல்லாபூரின் பாகேபள்ளி, மாண்டியாவின் கே.ஆர்.பேட், தாவணகெரே, ஹாசன், மங்களூரு நகர், ஷிவமொக்கா, பெங்களூரு ரூரல், பெலகாவி, விஜயபுரா.
ஹாவேரி, உடுப்பி, தட்சிணகன்னடா மாவட்டத்தின் பண்ட்வால் உட்பட 17 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் நடந்தது. எந்த அசம்பாவிதமும் நடக்காமல், போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தனர். பதற்றமான, மிகவும் பதற்றமான பகுதிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர்.
மதியம் 2:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. திறந்த வாகனங்களில் இந்தியத்தாய், ஆர்.எஸ்.எஸ்.,சை உருவாக்கிய கேசவ் பலிராம் ஹெக்டேவார், குருஜி மாதவராவ் உருவப்படங்களை வைத்து கொண்டு நடந்த ஊர்வலத்தில் சிறார்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
மாலுாரின் ஹூண்டா ஸ்டேடியத்தில் இருந்து துவங்கிய ஊர்வலம், பி.இ.ஓ., அலுவலகம் வழியாக குவெம்பு சதுக்கம், தர்மராய சுவாமி கோவில், அக்ரஹாரா வீதி, கும்பார்பேட் சதுக்கம், தொட்டபேட், மஹாராஜா சதுக்கம், பாபுராவ் சாலை, கெம்பேகவுடா சதுக்கம், மாரிகாம்பா சதுக்கம், பிரம்ம குமாரி சாலை, அரளேரி சாலையை கடந்து சென்றது. பல்வேறு சாலைகள், சதுக்கங்கள் வழியாக சென்று, ராகவேந்திரா கோவில் வளாகத்தில் முடிவடைந்தது.
உருவப்படங்கள் இது போன்று, மற்ற இடங்களில் நடந்த ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்றனர். ஊர்வலம் சென்ற சாலைகள் நெடுகிலும், காவிக்கொடி, பிளக்ஸ், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களின் உருவப்படங்கள் பொருத்தப்பட்டிருந்தன.
மாநில சட்டம் - ஒழுங்கு பிரிவு கூடுதல் கமிஷனர் ஹிதேந்திரா அளித்த பேட்டி:
மாநிலத்தின், 17 மாவட்டங்களில், இன்று (நேற்று) அணி வகுப்பு நடந்தது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ராய்ச்சூர், ஹாசன், ஷிவமொக்கா, மாண்டியா, பெலகாவி, கோலார், விஜயபுரா என, ஊர்வலம் நடந்த மாவட்டங்களில், எஸ்.பி.,க்கள் தலைமையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
உள்ளூர் போலீசாருடன், கே.எஸ்.ஆர்.பி., - டி.ஏ.ஆர்., படையினரும் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டனர்.
சிறு அசம்பாவிதங்களும் ஏற்படக்கூடாது என, மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு உத்தரவிடப்பட்டது. ஊர்வலம் நடக்கும் பாதைகள் கண்காணிக்கப்பட்டன. சில மாவட்டங்களில், அமைதி கூட்டமும் நடத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

