காவி சால்வையா, தேசிய கொடியா? விவாதிக்க தயாராகிறார் சிவகுமார்!
காவி சால்வையா, தேசிய கொடியா? விவாதிக்க தயாராகிறார் சிவகுமார்!
ADDED : ஜூன் 02, 2026 01:21 AM

பெங்களூரு: ''பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு காவி நிற சால்வை வேண்டுமா அல்லது தேசிய கொடி வேண்டுமா என்று விவாதிப்போம்,'' என மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தெரிவித்தார்.
டில்லிக்கு புறப்படுவதற்கு முன், பெங்களூரில் தனது வீட்டில் நேற்று சிவகுமார் அளித்த பேட்டி:
புதிய கல்வியாண்டில் அரசு சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் என் அன்பு மாணவர்களுக்கு நல்வாழ்த்துகளையும், வெற்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.
பள்ளிக்கு மாணவர்களுக்கு நமது காவி நிற சால்வை அணிய வேண்டுமா அல்லது தேசிய கொடி வேண்டுமா என்பது குறித்து விவாதிப்போம். நம்மிடம் கல்வி கற்ற மாணவர்கள், உலகளவில் மதிப்புமிக்க மனித வளமாக தங்களின் பங்களிப்பை செய்துள்ளனர். இதற்கு உலகமே சாட்சி. நம் அறிவு களஞ்சியம் உலகையே ஈர்க்கிறது.
நம் மாணவர்கள் உலகின் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று, பல சாதனைகளை படைத்துள்ளனர். நம்மிடம் மதிப்புமிக்க மனிதவளம் உள்ளது. அதனால் தான், உலகம் கர்நாடகாவின் வழியாக இந்தியாவை பார்க்கிறது.
இதனால் தான் நம் முன்னோர்கள், இங்கு ஐ.ஐ.டி.,கள், ஐ.ஐ.எம்.,கள், தேசிய சட்ட கல்லுாரி, இஸ்ரோ, எச்.ஏ.எல்., மற்றும் பிற முக்கிய நிறுவனங்களை துவங்கி உள்ளனர்.
இவற்றை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல குழந்தைகள் தங்கள் கல்வியை தொடர வேண்டும்.
குஜராத்தின் செல்வாக்கு காரணமாக, ஐ.பி.எல்., இறுதி போட்டி, எங்களிடம் இருந்து பறிக்கப்பட்டு உள்ளது. அது மீண்டும் நடக்காத வகையில் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்; இதற்கு சில காலம் அவகாசம் தேவைப்படும்.
இது, நம் மைதானத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி. இது நம் இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. நம் ஆர்.சி.பி., கர்நாடகா அணிக்காக, நம் மாநிலம் ஐ.பி.எல்., தொடரில் மிக சிறப்பாக விளையாடி உள்ளது. கர்நாடக மாநில அரசு சார்பிலும், ரசிகர்கள் சார்பில் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
