ADDED : ஜூன் 24, 2026 10:40 PM

- நமது நிருபர் -
எப்போதும் குளிர்ச்சியான சூழ்நிலை, கண்களை கவரும் பசுமையான இயற்கை காட்சிகள், பனி படர்ந்த மலைகளை பார்க்க வேண்டும், அங்கு சிறிது நேரமாவது பொழுதை கழிக்க வேண்டும் என்ற ஆசை, பலருக்கும் இருக்கும். இத்தனை அழகையும் ஒரே இடத்தில் காண விரும்பினால், கர்நாடகாவின் குடகு மாவட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
குடகு அல்லது கூர்க் என அழைக்கப்படும் குடகு மாவட்டம், கர்நாடகாவின் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு நடுவே உள்ள இம்மாவட்டம், 'இந்தியாவின் ஸ்காட்லாந்து' என, அழைக்கப்படுகிறது. சுற்றிலும் மலைகள், ஆறுகள் சூழ்ந்துள்ளன. பசுமை காட்சிகள் கொண்ட அடர்த்தியான வனங்களையும் இங்கு காணலாம். குடகு மாவட்டத்தில் காபி, தேயிலை தோட்டங்களும் ஏராளம்.
அனைத்து பருவ காலங்களிலும், குறிப்பாக, மழைக்காலத்தில் இங்கு வந்தால், இனிமையான அனுபவம் கிடைக்கும். இதற்காகவே சுற்றுலா பயணியருக்கு, குடகு விருப்பமான இடமாக உள்ளது.
மனதை மயக்கும் இயற்கை அழகு, பனி படர்ந்த மலைகள், ஆறுகள், குளிர்ச்சியான சூழ்நிலை ஸ்காட்லாந்தை நினைவுபடுத்தும். அனைத்து பருவ காலங்களிலும், இதே சூழ்நிலை உள்ளது. காபி, தேயிலை தோட்டங்கள் மட்டுமின்றி, ஏலக்காய், மிளகு உட்பட, மசாலா பொருட்களின் தோட்டங்களும் இங்குள்ளன.
குடகில் பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன. மடிகேரி அருகில் உள்ள அப்பே நீர்வீழ்ச்சி, காபி தோட்டங்களுக்கு இடையே பாய்ந்து செல்கிறது. இது, சுற்றுலா பயணியருக்கு பிடித்தமான இடமாகும். குஷால்நகர் அருகில் காவிரி ஆற்றங்கரையில் உள்ள, யானைகள் முகாம், மூங்கில் மரங்கள் சூழ்ந்த நிசர்கதாமா பார்க்க வேண்டிய இடங்களாகும்.
தொங்கு பாலத்தை கடந்து சென்றால், நிசர்கதாமா என்ற, இயற்கையின் சொர்க்கத்தை காணலாம். படகு சவாரி செய்யலாம். இது அற்புதமான தீவு. இங்கு அபூர்வமான மரங்கள், தேக்கு, சந்தன மரங்களை காணலாம்.
காவிரி ஆறு பிறப்பு பிரம்மகிரி மலைகளில் கடல் மட்டத்தில் இருந்து, 1,276 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தலக்காவிரியும் கூட, குடகின் முக்கியமான சுற்றுலா தலமாகும். காவிரி ஆறு பிறப்பெடுக்கும் இந்த பகுதி, மலைகளுக்கு இடையே, இயற்கை அழகுடன் மனதை கொள்ளை கொள்கிறது. மடிகேரி கோட்டை, குடகின் வரலாற்றை உலகுக்கு அறிமுகம் செய்யும் முக்கியமா ன இடம்.
சாகசத்தில் விருப்பம் உள்ளவர்களுக்கு, குடகு அற்புதமான இடம். தடியன்டமோள் மலையில் டிரெக்கிங் செய்யலாம். பரபோளே ஆற்றில் 'ரிவர் ராப்டிங்' செய்யலாம். புஷ்பகிரி வன விலங்குகள் சரணாலயத்தில், பல விதமான விலங்குகளை காணலாம்.
காபி தோட்டங்களுக்கு சென்று, காபி தயாரிப்பை நேரில் தெரிந்து கொள்ளலாம். இத்தகைய பல சிறப்புகள் உள்ளதால், ஆண்டு முழுதும் சுற்றுலா பயணியர் குவிகின்றனர்.
