அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிகளுக்கு 'சீல்'
அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிகளுக்கு 'சீல்'
UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 09:44 PM
ஆனேக்கல்: ஆனேக்கலில் அனுமதியின்றி கட்டப்படும், 18 அடுக்கு மாடி கட்டடங்களுக்கு, கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
பெங்களூரு ரூரல் மாவட்டம், ஆனேக்கல் தாலுகாவின் ஈடன் கார்டன், சாஹி கார்டன் லே - அவுட் பகுதிகளில், அனுமதியின்றி அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுவதாக பி.டி.ஏ., எனும் பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்துக்கு தகவல் கிடைத்தது.
இந்த கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க, பியாகடதேனஹள்ளி கிராம பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன் படி, கிராம பஞ்சாயத்து அதிகாரிகள், கட்டட உரிமையா ளர்களுக்கு சில நாட்களுக்கு முன் நோட்டீஸ் வழங்கினர். இதற்கு, கட்டட உரிமையாளர்கள் தரப்பிலிருந்து பதில் எதுவும் வரவில்லை.
இதையடுத்து, முறையான அனுமதியின்றி கட்டப்பட்ட 18 அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு, கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:
இப்பகுதியில், இரண்டு மாடிக்கு மேல் கட்டடம் கட்ட, பி.டி.ஏ.,விடம் முறையான அனுமதி வாங்குவது அவசியம். ஆனால், கட்டட உரிமையாளர்கள் எவ்வித அனுமதியும் வாங்கவில்லை. இப்பகுதிக்கு, அருகில் ஏராளமான கல்லுாரிகள் இருப்பதால், அனுமதியின்றி கட்டடம் கட்டி, மாணவர்களுக்கு வாடகை விடுவதற்கு திட்டமிட்டனர்.
பெரிய அளவிலான கட்டடங்கள் கட்டப்படும் போது, ஏராளமான விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். இந்த விதிகள் எதுவும் கடைப் பிடிக்கப்படாத கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள் ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
