/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தந்தம் உடைந்த காட்டு யானையை வனப்பகுதியில் தேடும் பணி தீவிரம்
/
தந்தம் உடைந்த காட்டு யானையை வனப்பகுதியில் தேடும் பணி தீவிரம்
தந்தம் உடைந்த காட்டு யானையை வனப்பகுதியில் தேடும் பணி தீவிரம்
தந்தம் உடைந்த காட்டு யானையை வனப்பகுதியில் தேடும் பணி தீவிரம்
ADDED : நவ 11, 2025 04:24 AM
ஹாசன்: தந்தம் உடைந்த காட்டு யானையை, வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிரமாக தேடுகின்றனர்.
ஹாசன் பேலுார் தாலுகாவில் உள்ள கிராமங்களில், காட்டு யானைகள் அட்டகாசம் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. ஜகபோரனஹள்ளி, கோகிலமனே கொப்பலு உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்து, அடிக்கடி யானைகள் மக்களை அச்சுறுத்துகின்றன. யானைகளை அடையாளம் கண்டு, வனத்துறையினர் பெயர் சூட்டி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து கேப்டன், பீமா ஆகிய இரண்டு காட்டு யானைகள் வெளியேறி, ஜகபோரனஹள்ளி கிராமத்திற்குள் புகுந்தன. முதலில் 'கேப்டன்' யானை ஊருக்குள் வந்தது. அதனை பின்தொடர்ந்து 'பீமா'வும் வந்தது.
ஊருக்குள் வந்த சிறிது நேரத்தில், இரண்டு யானைகளும் திடீரென மோதிக் கொண்டன. 'கேப்டன்' யானை தாக்கியதாலும், மரத்தில் மோதிக் கொண்டதாலும் 'பீமா'வின் ஒரு தந்தம் முறிந்தது. இவற்றின் மோதலை முடிவுக்குக் கொண்டு வர வனத்துறையினர் பட்டாசு வெடித்தனர்.
வெடிச்சத்தத்தால் இரு யானைகளும் தனித்தனியே பிரிந்து வனப்பகுதிக்குள் சென்றன.
'பீமா' மீது இருந்த கோபத்தால் 'கேப்டன்' யானை, ஒரு வீட்டின் முன் இருந்த 'சின்டெக்ஸ்' தண்ணீர் தொட்டியை தன் தும்பிக்கை யால் உடைத்தது. இந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
ஒற்றை தந்தத்துடன் சுற்றும் 'பீமா' யானை மீண்டும் கிராமத்திற்குள் வந்தால், மக்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்படும் என, வனத்துறையினர் கருதுகின்றனர். காயம்பட்ட 'பீமா'வுக்கு சிகிச்சை அளிக்க, வனப்பகுதிக்குள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

