/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
2வது மனைவியை கொன்ற 2வது கணவர் போலீசில் சரண்
/
2வது மனைவியை கொன்ற 2வது கணவர் போலீசில் சரண்
ADDED : ஏப் 09, 2025 07:18 AM
நெலமங்களா : முதல் கணவருக்கு பிறந்த மகனை பார்க்க சென்ற இரண்டாவது மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த இரண்டாவது கணவர், போலீசில் சரண் அடைந்தார்.
நெலமங்களாவின் விஸ்வசாந்தி நகரில் வசித்து வந்தவர் சல்மா, 30. தன்னை அடித்துக் கொடுமைப்படுத்தியதால், கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். 10 வயது மகனுடன், தன் பெற்றோருடன் வசித்து வந்தார்.
மகளின் நிலையை பார்த்து வேதனை அடைந்த பெற்றோர், எட்டு மாதங்களுக்கு முன்பு, மகளை இம்ரான் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இம்ரானுக்கும், இது இரண்டாவது திருமணம்.
திருமணத்தின்போது, 'சல்மாவின் பெற்றோருடன் வசித்து வரும் முதல் கணவரின் மகனை பார்க்க செல்லக்கூடாது' என, இம்ரான் நிபந்தனை விதித்திருந்தார்.
ஆனால், அடிக்கடி மகனை சல்மா பார்த்து வந்துள்ளார். இதுபோன்று இரண்டு நாட்களுக்கு முன்பு, மகனை பார்த்து விட்டு வந்தார். இதையறிந்த இம்ரான், சல்மாவிடம் சண்டை போட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் கோபம் அடைந்த இம்ரான், சல்மாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, தப்பியோடி விட்டார். இம்ரான் ஓடுவதை பார்த்த அப்பகுதியினர், வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.
சல்மா இறந்து கிடந்தார். உடனடியாக நெலமங்களா டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அங்கு வந்த எஸ்.பி., பாபா, சம்பவ இடத்தை பார்வையிட்டு அவர் கூறுகையில், ''கொலை செய்துவிட்டு தப்பியோடிய இம்ரான், நெமலங்களா டவுன் போலீசில் சரண் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதேவேளையில், தங்கள் மகளை வரதட்சணை கொடுமைப்படுத்தி, கொலை செய்துள்ளதாக அவரது பெற்றோர் புகார் செய்துள்ளனர். விசாரணை நடக்கிறது,'' என்றார்.