பெங்., சின்னசாமி மைதானத்தில் பாதுகாப்பு படையினர் ஒத்திகை
பெங்., சின்னசாமி மைதானத்தில் பாதுகாப்பு படையினர் ஒத்திகை
ADDED : மார் 27, 2026 05:29 AM

பெங்களூரு: ஐ.பி.எல்., போட்டியின் போது, சின்னசாமி மைதானத்தில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருப்பதை தடுக்க, 500க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் நேற்று ஒத்திகையில் ஈடுபட்டனர்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், கடந்த ஆண்டு நடந்த ஆர்.சி.பி., அணி வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பல மாதங்களுக்கு பிறகு சின்னசாமி மைதானத்தில் மீண்டும் ஐ.பி.எல்., போட்டிகள் நடைபெற உள்ளன. நாளை ஆர்.சி.பி., எனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும், சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே போட்டி நடைபெற உள்ளது.
இந்த போட்டியின் போது, கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக, பல நடவடிக்கைகளை நகர போலீசார் எடுத்து உள்ளனர். மேலும், மைதானத்தை சுற்றி ஏ.ஐ., தொழில் நுட்பத்தில் இயங்கும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆம்புலன்சுகள், தீயணைப்பு கருவிகள் போன்றவை தயார் நிலையில் உள்ளன.
இருப்பினும், நகர போலீசார் சார்பில், மைதானத்தில் கூட்டநெரிசல் ஏற்படாமல் இருப்பதை தடுப்பது எப்படி என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி, சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினரும், போலீசாரும் பங்கேற்றனர்.
கூட்டநெரிசலின் போது என்னென்ன செய்ய வேண்டும், மூச்சு விட சிரமப்படுவோருக்கு செய்ய வேண்டிய முதலுதவி என்ன என்பது உட்பட பல்வேறு ஒத்திகைகள் செய்யப்பட்டன.
பின்னர், நகர போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் கூறுகையில், ''ஐ.பி.எல்., போட்டியை பார்க்க வரும் ரசிகர்கள் அனைவரும் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். போலீசாருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். மது, போதைப் பொருட்களை பயன்படுத்திவிட்டு போட்டியை காண வரக்கூடாது. உங்களுக்கு பிடித்த அணிக்கு ஆதரவு தெரிவியுங்கள். அதே சமயம், கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுங்கள்,'' என்றார்.
