/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'கல்யாண் கர்நாடகாவுக்கு தனி அமைச்சகம்'
/
'கல்யாண் கர்நாடகாவுக்கு தனி அமைச்சகம்'
ADDED : செப் 18, 2025 07:45 AM

கலபுரகி : கல்யாண் கர்நாடகாவுக்கு தனி அமைச்சகம் அமைக்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக, முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, கல்யாண் கர்நாடகா பகுதிகள், நிஜாம் ஆட்சியிலிருந்து 1948 செப்டம்பர் 17ம் தேதி விடுவிக்கப்பட்டன. இதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ம் தேதி மாநில அரசு தரப்பில் விழா நடத்தப்படுகிறது.
நேற்று கலபுரகியில் நடந்த விழாவில் முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
மாநிலத்தில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால், பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. சேதம் அடைந்த பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும். இது மழை பெய்து கொண்டிருப்பதால் தாமதமாகி உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து கூடுதல் நிவாரணம் வழங்க கோரி உள்ளேன். ஆனால், அவர்களிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. விவசாய கடனை தள்ளுபடி செய்வது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்.
வரும் 22ம் தேதி முதல் அடுத்த மாதம் 7ம் தேதி வரை மாநிலத்தில் சமூக மற்றும் கல்வி கணக்கெடுப்பு நடத்தப்படும். இதில் 1.75 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
சுதந்திர இந்தியா வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும்போது, கல்யாண் கர்நாடகா பகுதியில் உள்ள மாவட்டங்கள் போதிய மேம்பாடு இல்லாமல் உள்ளன. இந்த ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்காகவே, 1990ல் ஹைதராபாத் மேம்பாட்டு வாரியம் அமைக்கப்பட்டது. இது கல்யாண் கர்நாடகா மேம்பாட்டு வாரியமாக மாற்றப்பட்டது.
கல்யாண் கர்நாடகா பகுதியில் உள்ள மாவட்டங்களின் மேம்பாட்டுக்காக தனி அமைச்சகம் அமைக்கப்படும். இதற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
விரைவில் தனி அமைச்சர் நியமிக்கப்படுவார். இது கல்யாண் கர்நாடகாவின் மேம்பாட்டுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும்.
இதன் மூலம் புதிய திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படும். கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். வேலையில்லாத இளைஞர்கள் பயனடைவர்.
இவ்வாறு அவர் பேசினார்.