'செப்டிக் டேங் 'கில் தொழிலாளர்கள்: விசாரணைக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவு
'செப்டிக் டேங் 'கில் தொழிலாளர்கள்: விசாரணைக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவு
ADDED : ஆக 04, 2026 11:26 PM
தாவணகெரே: விருந்தினர் இல்லத்தில் விதி மீறலாக செப்டிக் டேங்க் அடைப்பை சரி செய்ய, இரண்டு துாய்மை பணியாளர்களை பயன்படுத்தியது குறித்து, மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
தாவணகெரே நகரில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் விருந்தினர் இல்லம் உள்ளது. ஜூலை 27ம் தேதியன்று, இந்த விருந்தினர் இல்லத்தின் கழிப்பறையின் செப்டிக் டேங்கில் அடைப்பு ஏற்பட்டிருந்தது.
இதை சரி செய்யும்படி உதவி செயல் நிர்வாக பொறியாளர், விருந்தினர் இல்லத்தின் துப்புரவு பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். ஆனால் அவர்களுக்கு எந்த பாதுகாப்பு சாதனங்களும் வழங்கப்படவில்லை.
கட்டாயம் செப்டிக் டேங்க், சாக்கடைகள் அடைத்து கொண்டால், அதை வெறுங் கையால் சுத்தம் செய்வதை, பல ஆண்டுகளுக்கு முன்பே, அரசு தடை செய்துள்ளது. சாக்கடைக்குள் ஆட்களை இறக்க கூடாது என, நீதிமன்றங்களும் பல முறை அறிவுறுத்தியுள்ளன. சாக்கடைகள் போன்ற அபாயமான இடங்களை, சுத்தம் செய்யும் துப்புரவு பணியாளர்களுக்கு, ஷூக்கள், கையுறை, மாஸ்க் உட்பட, பாதுகாப்பு சாதனங்களை வழங்குவது கட்டாயம்.
ஆனால் இது போன்ற எந்த பாதுகாப்பு சாதனங்களையும் வழங்காமல், இரண்டு துாய்மை பணியாளர்களை, விருந்தினர் இல்லத்தின் செப்டிக் டேங்குக்குள் இறக்கி, செயல் நிர்வாக பொறியாளர் சுத்தம் செய்ய வைத்துள்ளார்.
இதை தலித் அமைப்புகள் கண்டித்துள்ளன. கர்நாடக தலித் சங்கர்ஷ கமிட்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராகவேந்திரா கடேமனி, தாவணகெரே கலெக்டர் கங்காதரசாமியிடம் புகார் அளித்துள்ளார்.
இதன்படி விசாரணை நடத்தி, அறிக்கை அளிக்கும்படி மாநகராட்சி கமிஷனருக்கு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
விதிமீறல் இது குறித்து ராகவேந்திரா கடேமனி கூறியதாவது:
செப்டிக் டேங்க், சாக்கடை கழிவுகளை, கையால் அள்ளும் நடை முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சம்பவங்கள் 21ம் நுாற்றாண்டிலும் நடப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சட்டத்தை பற்றி தெளிவு இருந்தும், அதிகாரிகள் எந்த பாதுகாப்பு சாதனங்கள் இல்லாமல், விஷத்தன்மை உள்ள செப்டிக் டேங்குக்குள், துாய்மை பணியாளர்களை இறங்க வைத்துள்ளார்.
பணியாளர்களின் உயிருக்கு ஏதாவது அபாயம் ஏற்பட்டால், யார் பொறுப்பு. பணியில் ஈடுபட்ட இரண்டு பணியாளர்களுக்கு, உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
