UPDATED : நவ 19, 2026 12:00 AM
ADDED : நவ 18, 2026 08:02 PM

- நமது நிருபர் -
பெங்களூரில் வசிப்பவர்கள் வார இறுதி நாட்களில் குடும்பத்தினர், நண்பர்களுடன் அமைதியான சுற்றுலா தலத்திற்கு சென்று வர வேண்டும் என்று நினைக்கிறீர்களா... அப்படி என்றால், நாமத சிலுமே மான் பூங்காவுக்கு சென்று வரலாம்.
துமகூரு தாலுகா, தேவராயனதுர்கா மலை அடிவார பகுதியில், கர்நாடக அரசின் வனத்துறையினரால் பராமரிக்கப்படும் வனப்பகுதி உள்ளது. வனப்பகுதிக்குள், நாமத சிலுமே என்ற இடம் அமைந்துள்ளது
ராமாயண காலத்தில் ராமன், சீதா, லட்சுமணன் வனவாசத்தின் போது, தேவராயனதுர்கா காடுகள் வழியே பயணித்ததாக உள்ளூர் மக்களால் நம்பப்படுகிறது.
ஒரு நாள் காலை வேளையில், ஸ்ரீராமர் தனது நெற்றியில் திலகமிட தண்ணீர் தேடிய போது, எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.
இதனால், தண்ணீர் இல்லாத வறண்ட பாறையின் மீது, ஸ்ரீராமர் தனது வில் அம்பை செலுத்தினார். அம்பு பாறையை துளைத்து, துாய்மையான நீர் பீறிட்டு வந்துள்ளது. அந்த நீரால் நெற்றியில் நாமம் இட்டுள்ளார். இதனால் தான் அந்த இடத்திற்கு பிற்காலத்தில், 'நாமத சிலுமே' என்று பெயர் வந்துள்ளது.
இப்போதும் கூட, ராமர் வில் எய்த பாறையில் இருந்து, நீர் கசிந்து கொண் டே இருக்கிறது. இந்த தண்ணீர், பாறையில் இருந்து வெளியேறி சிறிய ஓடையாக ஓடி, காட்டில் உள்ள வனவிலங்குகள் தாகத்தை தணிக்கிறது.
இந்த நீர்சுனைக்கு மிக அருகிலேயே, அழகிய மான் பூங்கா உள்ளது. இங்கு ஏராளமான புள்ளி, சாம்பார் மான்கள் வளர்க்கப்படுகின்றன.
குறிப்பாக, குழந்தைகள், மான்கள் துள்ளி குதித்து விளையாடுவதை கண்டு மகிழும் வாய்ப்பு உள்ளது.
அரிய வகை மூலிகை செடிகள், மரங்களும் நிறைந்துள்ளன. பறவைகள் மீது அன்பு கொண்டவர்களுக்கு இந்த இடம் சொர்க்கம். ஏராளமான பறவைகளின் புகலிடமாக உள்ளது.
சுத் தமான காற்றை சுவாசிக்க நினைப்போர், நகர வாழ்க்கையில் பரபரப்பில் இருந்து விடுபட நினைப்போருக்கு இந்த இடம் சொர்க்கமாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
தினமும் காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை செல்லலாம். நுழைவு, வாகன நிறுத்த கட்டணம் உண்டு. காப்பு காடு என்பதால் குரங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எனவே, கையில் உள்ள பொருட்களை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து தேவராயனதுர்கா 75 கி.மீ., துாரத்தில் உள்ளது. துமகூரு நகரில் இருந்து 14 கி.மீ., துாரம்.
மெஜஸ்டிக்கில் இருந்து துமகூருக்கு அடிக்கடி கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் செல்கின்றன. இங்கிருந்து தேவராயனதுர்காவுக்கு ஆட்டோக்களில் செல்லலாம். ரயிலில் செல்வோர் துமகூரில் இறங்கி, அங்கிருந்து செல்ல வேண்டும்.
