ஐ.பி.எல்., இறுதி போட்டி விவகாரம் குஜராத் மீது சிவகுமார் குற்றச்சாட்டு
ஐ.பி.எல்., இறுதி போட்டி விவகாரம் குஜராத் மீது சிவகுமார் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 02, 2026 01:14 AM

பெங்களூரு: ''பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐ.பி.எல்., இறுதி போட்டி நடத்தும் வாய்ப்பை, குஜராத் நபர்கள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி பறித்து கொண்டனர்,'' என்று, மாநில காங்., தலைவர் சிவகுமார் குற்றச்சாட்டு கூறி உள்ளார்.
ஐ.பி.எல்., எனும் இந்தியன் பிரிமியர் லீக்கின், 19வது சீசன் கிரிக்கெட் போட்டிகள் நேற்று முன்தினம் முடிந்தது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆர்.சி.பி., எனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
இதுகுறித்து, சிவகுமார் நேற்று அளித்த பேட்டி:
ஐ.பி.எல்., இறுதி போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தான் நடக்க இருந்தது. போட்டியை நடத்த அரசும் அனுமதி அளித்து இருந்தது.
ஆனால் குஜராத் நபர்கள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி, இங்கு நடக்க இருந்த போட்டியை ஆமதாபாதிற்கு மாற்றி விட்டனர். எங்கள் வாய்ப்பு பறிக்கப்பட்டது.
எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க, தேவையான முன் ஏற்பாடுகளை செய்வோம். ஆர்.சி.பி., அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐ.பி.எல்., சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அந்த அணிக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். கர்நாடகாவின் பெயரில் விளையாடும் அணியில் உள்ள வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு உள்ளனர்.
மாநில அரசு, ரசிகர்கள் சார்பாக அணிக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள். எதிர்காலத்திலும் அணி சிறப்பாக செயல்படும் என்று நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.பி.எல்., இறுதி போட்டி பெங்களூரில் தான் முதலில் நடக்க இருந்தது. ஆனால், சில தொழில்நுட்ப காரணங்கள், எம்.எல்.ஏ.,க்கள் இலவச டிக்கெட் கேட்டதால் இறுதி போட்டி ஆமதாபாதிற்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
