பாறை போன்ற சிவகுமார் துாள் துாளாவார் : பா.ஜ., கிண்டல் ராமலிங்கரெட்டி ராஜினாமா குறித்து பா.ஜ., கிண்டல்
பாறை போன்ற சிவகுமார் துாள் துாளாவார் : பா.ஜ., கிண்டல் ராமலிங்கரெட்டி ராஜினாமா குறித்து பா.ஜ., கிண்டல்
ADDED : ஜூன் 06, 2026 03:53 AM

பெங்களூரு: 'பாறை போன்ற சிவகுமார் துாள், துாளாக போய் விடுவார்' என, ராமலிங்கரெட்டி ராஜினாமா குறித்து, பா.ஜ., கிண்டல் செய்துள்ளது.
பெங்களூரு நகர வளர்ச்சி துறை கிடைக்காததால், அமைச்சர் பதவியை ராமலிங்கரெட்டி ராஜினாமா செய்துள்ளார். இதனால் முதல்வர் சிவகுமாரை, பா.ஜ., தலைவர்கள் கடுமையாக விமர்சித்து உள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறியுள்ளதாவது:
சிவகுமார் முதல்வராக பதவியேற்ற போது கையில் அரசியலமைப்பு புத்தகத்தை வைத்து இருந்தார். ஆனால் அவருக்கு உண்மையில் எந்த அதிகாரமும் கிடைக்கவில்லை.
சிவகுமார் அமைச்சரவையில் அவரது ஆதரவாளர்கள் ஒருவர் கூட அமைச்சராகவில்லை. அமைச்சர்களை தேர்வு செய்யும் உரிமை கூட சிவகுமாருக்கு இல்லை.
ராமலிங்கரெட்டி ராஜினாமா மூலம் அரசின் முதல் விக்கெட் விழுந்து உள்ளது. இன்னும் நிறைய விக்கெட்டுகள் விழும் அறிகுறிகள் தென்படுகின்றன. விக்கெட்டுகளை வீழ்த்தும் சிறந்த பந்து வீச்சாளர் யார். சூரிய உதயம் இல்லாத நாள் கூட இருக்கும். ஆனால் காங்கிரசில் உட்கட்சி பூசல் இல்லாத நாளே இல்லை.
இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.
பிடித்தம் இல்லை அசோக் அளித்த பேட்டி:
பழைய சினிமாவின் புதிய போஸ்டர் வெளியாகும் முன்பே, அரசில் பிரச்னை கிளம்பியுள்ளது. ராமலிங்கரெட்டி எட்டாவது முறை எம்.எல்.ஏ.,வாக உள்ளார். பெங்களூரை பற்றிய அனுபவம் கொண்டவர். பெங்களூரு நகர வளர்ச்சி துறையை கொடுப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு, சிவகுமார் ஏமாற்றுவது சரியல்ல.
இன்னும் யாருக்கு என்னென்ன வாக்குறுதி கொடுத்து உள்ளாரோ என தெரியவில்லை.
சித்தராமையா அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்த மூத்த எம்.எல்.ஏ., - எச்.கே.பாட்டீலுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.
சட்டசபை நடக்கும் போது எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க திறமையான அமைச்சர்கள் இல்லை. அமைச்சர்கள் மீது சிவகுமாருக்கு பிடித்தம் இல்லை. அவர் முதல்வராக இருக்க தகுதியற்றவர். கர்நாடக காங்கிரசில் தினமும் நிலவும் பிரச்னையை தீர்க்க, மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா இங்கேயே வீடு வாங்கினாலும் நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தலுக்கு தயார் மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி கூறுகையில், ''பெரிய பிரச்னைக்கு ஆரம்பமே சிறிய அதிருப்தி தான். இதை கவனிக்காமல் விட்டால் பிரச்னை வெடித்தே தீரும். கிரஹப்பிரவேசம் நடந்த வீட்டில், இரண்டே நாட்களில் சுவர் இடிந்து விழுந்தால் என்ன ஆகுமோ அதுபோல காங்கிரசிலும் நடந்து உள்ளது. ராமலிங்கரெட்டி மூத்த தலைவர். அவரை மரியாதையுடன் நடத்தியிருக்க வேண்டும். சிவகுமார் அரசுக்கு ஆரம்பத்திலேயே பிரச்னை வந்துள்ளது. எத்தனை நாட்கள் அரசு நீடிக்கும் என தெரியாது,'' என்றார்.
பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறுகையில், ''ராமலிங்கரெட்டி ராஜினாமாவால், சிவகுமார் அரசின் முதல் விக்கெட் விழுந்து உள்ளது. சிவகுமார் முதல்வர் என்றாலும் அவரது அமைச்சரவையில் இருப்பவர்கள், சித்தராமையா ஆட்கள் தான். தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ளன.
''தங்கள் எதிர்பார்ப்பை காங்கிரஸ் நிறைவேற்றாது என்று, மக்களுக்கு தெரிந்து விட்டது. பா.ஜ.,வை ஆதரிக்க தயாராக உள்ளனர். இந்த சட்டசபையின் காலம் முடிவதற்குள் தேர்தல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. தேர்தலுக்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்,'' என்றார்.
ராமலிங்கரெட்டி ராஜினாமாவை இன்னும் பல பா.ஜ., தலைவர்கள் விமர்சித்து உள்ளனர். ''சிவகுமாரை பாறை என்று கூறுவர். இந்த பாறை உடைந்து துாள், துாளாக போவது உறுதி,'' என, எம்.எல்.சி., ரவி உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் கிண்டலாக கூறியுள்ளனர்.
