/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கவர்னருக்கு பிறந்தநாள் வாழ்த்து சித்துவை கடுப்பேற்றிய சிவகுமார்
/
கவர்னருக்கு பிறந்தநாள் வாழ்த்து சித்துவை கடுப்பேற்றிய சிவகுமார்
கவர்னருக்கு பிறந்தநாள் வாழ்த்து சித்துவை கடுப்பேற்றிய சிவகுமார்
கவர்னருக்கு பிறந்தநாள் வாழ்த்து சித்துவை கடுப்பேற்றிய சிவகுமார்
ADDED : மே 18, 2025 08:40 PM

பெங்களூரு: கவர்னருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருப்பதன் மூலம், முதல்வர் சித்தராமையாவை, துணை முதல்வர் சிவகுமார் கடுப்பேற்றி உள்ளார்.
கர்நாடக கவர்னராக கடந்த 2021ம் ஆண்டு முதல் பணியாற்றி வருபவர் தாவர்சந்த் கெலாட். 2023ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், முதல்வர் சித்தராமையாவுக்கும், கவர்னர் கெலாட்டுக்கும் இடையில் நல்லுறவு இருந்தது. 'முடா'வில் இருந்து 14 வீட்டுமனைகள் வாங்கியதாக, முதல்வர் மீது சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா அளித்த புகாரில், சித்தராமையா மீது விசாரணை நடத்த கவர்னர் அனுமதி கொடுத்தார்.
அதில் இருந்து இருவருக்கும் இடையில் பனிப்போர் ஏற்பட்டு உள்ளது. அரசின் மசோதாக்களை திருப்பி அனுப்பியதால் முதல்வர், கவர்னர் இடையில் விரிசல் அதிகரித்தது.
இந்நிலையில் கவர்னர் கெலாட்டிற்கு நேற்று பிறந்தநாள். கவர்னருக்கு பிறந்தநாள் என்றால் முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து தெரிவிப்பது மரபாக உள்ளது. ஆனால், கெலாட் பிறந்தநாளுக்கு சித்தராமையா வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஆனால், துணை முதல்வர் சிவகுமார் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
கெலாட்டுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை, 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்தி உள்ளார். சிவகுமாருக்கு கடந்த 15ம் தேதி பிறந்தநாள். அவருக்கு, 'எக்ஸ்' பக்கத்தில் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். ஆனால், முதல்வர் மட்டும் எந்த வாழ்த்து தெரிவிக்கவில்லை.
முதல்வர் பதவிக்காக இருவரும் முட்டி மோதும் நிலையில், சிவகுமார் பிறந்தநாளுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவிக்காததை வைத்து, பா.ஜ., விமர்சனம் செய்தது. இதனால் வெறுப்பில் இருந்த சிவகுமார், கவர்னருக்கு வாழ்த்து தெரிவித்ததன் மூலம், சித்தராமையாவை கடுப்பேற்றி உள்ளதாக பேச்சு அடிபடுகிறது.