/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கார்கேயுடன் சிவகுமார் சந்திப்பு 'ஹனி டிராப்' குறித்து விளக்கம்?
/
கார்கேயுடன் சிவகுமார் சந்திப்பு 'ஹனி டிராப்' குறித்து விளக்கம்?
கார்கேயுடன் சிவகுமார் சந்திப்பு 'ஹனி டிராப்' குறித்து விளக்கம்?
கார்கேயுடன் சிவகுமார் சந்திப்பு 'ஹனி டிராப்' குறித்து விளக்கம்?
ADDED : மார் 29, 2025 06:52 AM

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை, துணை முதல்வர் சிவகுமார் டில்லியில் சந்தித்து பேசினார். அப்போது தன் மீது எழுந்து உள்ள, 'ஹனி டிராப்' குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்து உள்ளார்.
கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணாவை ஹனி டிராப் செய்ய முயன்ற விவகாரம், கர்நாடக அரசியல் புயலை கிளப்பி உள்ளது. ராஜண்ணாவை ஹனி டிராப் செய்ய முயன்றதில், துணை முதல்வர் சிவகுமாருக்கு நேரடி தொடர்பு உள்ளது என்று, பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா குற்றம் சாட்டி இருந்தார். இதனால் சிவகுமார் மீது காங்கிரசில் சிலருக்குஅதிருப்தி ஏற்பட்டது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, முதல்வர் சித்தராமையாவை பெங்களூரில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சந்தித்து பேசினார்.
அப்போது ராஜண்ணாவை ஹனி டிராப் செய்ய முயன்றவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுப்பது பற்றி இருவரும் விவாதித்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில் கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, நேற்று முன்தினம் சிவகுமார் டில்லி சென்றார். நேற்று காலையில் டில்லியில் உள்ள மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் அவரை, சிவகுமார் சிறிது நேரம் தனியாக சந்தித்து பேசினார். தன் மீதான ஹனி டிராப் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று, சிவகுமார் கூறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பின், மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் சேர்ந்து கார்கேயை மீண்டும் சந்தித்தார். மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்துவது, வரும் 2028 தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
வரும் 2ம் தேதி சித்தராமையா டில்லி செல்ல உள்ளார். அதற்கு முன்பே சிவகுமார் முந்தி கொண்டு, டில்லி சென்றது குறிப்பிடத்தக்கது.
- நமது நிருபர் -