/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'முடா' வழக்கில் மாஜி' கமிஷனர் தான் முக்கிய குற்றவாளி என 'திடுக்' தகவல்
/
'முடா' வழக்கில் மாஜி' கமிஷனர் தான் முக்கிய குற்றவாளி என 'திடுக்' தகவல்
'முடா' வழக்கில் மாஜி' கமிஷனர் தான் முக்கிய குற்றவாளி என 'திடுக்' தகவல்
'முடா' வழக்கில் மாஜி' கமிஷனர் தான் முக்கிய குற்றவாளி என 'திடுக்' தகவல்
ADDED : அக் 30, 2025 04:52 AM

மைசூரு: 'முடா' முறைகேடு வழக்கின் முக்கிய குற்றவாளி, அதன் முன்னாள் கமிஷனர் தினேஷ்குமார் என்பதும், தன் அதிகாரத்தை பயன்படுத்தி குடும்பத்தினர், காங்கிரஸ் பிரமுகர்களுக்கு சட்டவிரோதமாக வீட்டுமனைகள் ஒதுக்கியதும், அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
'முடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம், நிலம் ஒதுக்கிய பயனாளிகளுக்கு, 50:50 என்ற திட்டத்தின் கீழ் வீட்டுமனை ஒதுக்கியது. இந்த திட்டத்தில் நடந்த முறைகேடு பற்றியும், சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது தொடர்பாகவும், ஈ.டி., எனும் அமலாக்கத்துறை விசாரிக்கிறது.
கடந்த செப்டம்பர் மாதம், 'முடா' முன்னாள் கமிஷனர் தினேஷ்குமாரை, ஈ.டி., அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணைக்கு பின், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
தினேஷ்குமார் கொடுத்த தகவலின் அடிப்படையில், சட்டவிரோதமாக ஒதுக்கப்பட்ட, 150 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டுமனைகளை, ஈ.டி., மீட்டது. இதுவரை 440 கோடி ரூபாய் மதிப்பிலான 252 வீட்டுமனைகளை ஈ.டி., மீட்டுள்ளது.
மீட்கப்பட்ட வீட்டுமனைகள் தொடர்பாக ஒரு பட்டியலை தயாரித்த ஈ.டி., மைசூரு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த பட்டியலில் இருக்கும் வீட்டுமனைகளை யாருடைய பெயருக்கும் மாற்ற கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் வழக்கின் முக்கிய குற்றவாளி தினேஷ்குமார் என்பதும், அவர் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, குடும்பத்தினருக்கு வீட்டுமனை ஒதுக்கியதும் தெரிய வந்துள்ளது. இதுதவிர முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளரான பாப்பண்ணாவுக்கு, 31 வீட்டுமனைகளை சட்டவிரோதமாக ஒதுக்கியதும், ஒரே நாளில் 20 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணை, மீட்கப்பட்ட வீட்டுமனைகள் தொடர்பான தகவல்களை, டில்லியில் உள்ள தங்கள் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பவும், ஈ.டி., அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். வரும் நாட்களில் கூடுதலாக வீட்டுமனைகள் மீட்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

