/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் சித்து வருத்தம்
/
போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் சித்து வருத்தம்
ADDED : ஜூன் 28, 2025 12:20 AM

பெங்களூரு: “கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்தில் தயானந்தா உள்ளிட்ட அதிகாரிகளை 'சஸ்பெண்ட்' செய்தது, எனக்கு வருத்தத்தை அளித்தது. ஆனாலும் அவர்கள் தவறு செய்தது உண்மை,” என, போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில், முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார்.
பெங்களூரு நிருபதுங்கா சாலையில் உள்ள, டி.ஜி.பி., அலுவலகத்தில் இரண்டு நாட்கள் நடக்கும் உயர் போலீஸ் அதிகாரிகள் மாநாடு நேற்று துவங்கியது.
இதில் முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
மாநிலத்தில் குற்ற விகிதம் குறைந்திருப்பது நிம்மதி அளிக்கும் விஷயமாக இருந்தாலும், போலீஸ் விசாரணையின் தரம் குறைந்து இருப்பது கவலை அளிக்கிறது. விசாரணையின் தரத்தை மேம்படுத்த வேண்டும். பீதரில் நடந்த ஏ.டி.எம்., கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படவில்லை.
நான் 1983ம் ஆண்டு முதல் அரசியலில் உள்ளேன். என் அரசியல் வாழ்க்கையில் ஆர்.சி.பி., அணியின் வெற்றி கொண்டாட்டத்திற்கு வந்தது போன்ற கூட்டத்தை பார்த்ததே இல்லை. கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானது துரதிர்ஷ்டவசமானது. எவ்வளவு பேர் வருவர் என்பது பற்றி உளவுத்துறை விரிவான தகவல் வழங்கவில்லை. இதனால் தான் 11 பேர் இறந்தனர்.
உண்மை தான்
கூட்ட நெரிசல் ஏற்பட்ட அன்று மாலை 3:50 மணி முதல் இறப்புகள் நிகழ்ந்துள்ளன.
அதுபற்றி எனக்கு போலீசார் அதிகாரிகளிடம் இருந்து தகவல் வரவில்லை. மாலை 5:45 மணிக்கு நானே போன் செய்து, போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ஒருவர் மட்டுமே இறந்ததாக கூறினார். அதற்குள் 11 உயிரிழப்புகள் நிகழ்ந்திருந்தன.
எங்களுக்கு சரியான நேரத்தில் தகவல் கொடுத்திருந்தால், சின்னசாமி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியை ரத்து செய்திருக்கலாம். தயானந்த் உள்ளிட்ட மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிளை சஸ்பெண்ட் செய்தது, எனக்கு வருத்தமாக உள்ளது. ஆனாலும் அவர்கள் தவறு செய்தது உண்மை தான்.
வகுப்புவாதம்
குற்றவியல் வழக்குகளில் குற்றப்பத்திரிகையை முறையாகவும், திறம்படவும், சரியான நேரத்தில் சமர்ப்பிக்காமல் இருப்பதும் பெரிய தோல்வி. இதுபோன்ற விஷயங்களை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்.
வெறுப்பு பேச்சை பேசி மாநிலத்தின் அமைதியை குலைப்பவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? அவர்கள் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உங்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
தட்சிண கன்னடா மாவட்டத்தில் வகுப்புவாத மோதல், கொலைகள் அதிகரிப்பது ஏன்? அந்த மாவட்டத்தில் அமைதியை சீர்குலைப்பவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள்.
போலீஸ் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, இரண்டு மாதங்களுக்கு பின் ஆள்சேர்ப்பு செயல்முறை துவங்கப்படும்.
போலீஸ் துறையின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளேன். போதுமான நிதி வழங்கி உள்ளேன்.
சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் நீதி வழங்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பிரச்னைகளை தீர்க்கும் மிக பெரிய பொறுப்பு உங்களிடம் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த மாநாட்டில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், தலைமை செயலர் ஷாலினி, உள்துறை கூடுதல் தலைமை செயலர் கவுரவ் குப்தா, டி.ஜி.பி., சலீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.