
நாய்கள் பராமரிப்பில் ஆசை!
நடிகை ரச்சனா ராய், சிறந்த நடிகை மட்டுமல்ல, நல்ல எழுத்தாளர். கன்னட நாளிதழ் ஒன்றில் நாய்களை பற்றிய புத்தகம் எழுதியுள்ளார். அதில் 40க்கும் மேற்பட்ட இனங்களின் நாய்கள், அவற்றின் குணங்கள், சிறப்பம்சங்கள், வளர்க்கும் விதம் உட்பட, அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருந்தன. ஓ மை டாக் என்ற பெயரில், அவர் எழுதிய புத்தகத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.அச்சிடப்பட்ட அனைத்து புத்தகங்களும், மளமளவென விற்று தீர்ந்தன. இவருக்கு ஆதரவற்ற நாய்கள் மீது, அதிக பாசம் உள்ளது. வருங்காலத்தில் ஆதரவற்ற நாய்களை பராமரிக்க மையம் திறக்க வேண்டும் என்பது, ரச்சனா ராயின் கனவாம்.
விஷ்ணுவர்த்தன் பேரன் தயார்!
மறைந்த நடிகர் விஷ்ணு வர்த்தனின் மருமகன் அனிருத், சின்னத்திரை, வெள்ளித்திரை என, இரண்டிலும் ஜொலிக்கிறார். இதற்கிடையே இவரது மகன் ஜியேஷ்டவர்தனின் ஸ்டைலிஷான போட்டோக்கள், சோஷியல் மீடியாவில் உலா வருகிறது. இவர் ஆங்கிலம், மனவியல் மற்றும் ஊடக விஷயங்களில் பட்டப்படிப்பு படித்தவர்.
தன் தந்தையுடன் சேர்ந்து ரீல்ஸ், நடனம், பாடல் வீடியோக்களை அவ்வப்போது சோஷியல் மீடியாவில் வெளியிடுவார். இவரும் தன் தாத்தா விஷ்ணுவர்த்தன், பாட்டி பாரதி, தந்தை அனிருத் போன்று, கன்னட திரையுலகில் அடியெடுத்து வைப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களுக்கு நெருக்கமான கதை!
இயக்குனர் ராமேனஹள்ளி ஜெகன்னாத் இயக்கும், தீர்த்தரூப தந்தெயவரிகே திரைப்படம் வரும் ஜனவரி 1ல் திரைக்கு வருகிறது. இதில் நிஹார் முகேஷ் நாயகனாக நடித்துள்ளார். கன்னடரான இவர், தெலுங்கில் பிரபலமான நடிகர். அவருக்கு ஜோடியாக ரச்சனா நடித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பின், நடிகை சித்தாரா இந்த படத்தில் நடித்துள்ளார். இது மக்களுக்கு மிகவும் நெருக்கமான கதையாகும். வாழ்க்கையில் ஒருவர் செய்த சிறிய தவறு, அந்த குடும்பத்தில் எப்படி பாதிக்கிறது. இதை சரி செய்ய எவ்வளவு போராட வேண்டும் என்பதை, படத்தில் காட்டியுள்ளனர்.
தந்தை - மகள் பாசம்!
நடிகர் கிருஷ்ணா, நடிகை மிலனா நாகராஜ் நடிப்பில், கடந்த 2020ல், திரைக்கு வந்த லவ் மாக்டெய்ல் திரைப்படம் சூப்பர்ஹிட்டானது. அதன்பின் லவ் மாக்டெய்ல் - 2 திரைக்கு வந்தது. இதுவும் நன்றாக ஓடியது. தற்போது லவ் மாக்டெய்ல் - 3 திரைக்கு வர தயாராகிறது.
படத்தின் ஒரு பாடல் வெளியிடப்பட்டது. சஷாங்க் எழுதிய பாடலை, இசை அமைப்பாளர் நகுல் அபயங்கர் பாடியுள்ளார். இது தந்தை, மகளின் பாசப்பிணைப்பை கூறும் படமாகும். பெங்களூரு, மைசூரு, ஜோத்பூர், அந்தமான், ஜார்ஜியா உட்பட, பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
குடும்பத்துடன் சபரிமலை தரிசனம்!
ஆனந்த் ஆடியோ டியூப் சேனலில், அய்யப்ப சுவாமியின் பக்தி பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதை நடிகர் சிவராஜ்குமார் பாடியுள்ளளார். இந்த பாடல் வீடியோவில், சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார், வினய் ராஜ்குமார், யுவராஜ் குமார் உட்பட, குடும்பத்தினர் அய்யப்ப மாலை அணிந்து, சபரி மலைக்கு சென்ற படங்கள் காட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக புனித் ராஜ்குமாரும் கூட, மாலையணிந்து அய்யப்ப சுவாமியை தரிசித்த வீடியோவை காணலாம். இம்முறையும் சிவராஜ்குமாரின் குடும்பத்தினர் சபரி மலைக்கு சென்றுள்ளனர்.
முதன் முறையாக நாயகி!
நடிகர் துனியா விஜயின் மகள் ரிதன்யா, லேண்ட் லார்டு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது ரிஷி நாயகனாக நடிக்கும், ஜவரா திரைப்படத்தில் ரிதன்யா நாயகியாக நடிக்கிறார்.
மருத்துவ மாணவி பூமி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரிஷி ருத்ரன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரிதன்யா முதன் முறையாக நாயகியாக நடிக்கிறார். தன் தந்தை துனியா விஜயிடம் தேவையான பயிற்சி பெற்று, நடிப்புக்கு வந்துள்ளார்.

