நடக்கடலில் படகு மூழ்கி விபத்து சிக்கிய ஆறு மீனவர்கள் மீட்பு
நடக்கடலில் படகு மூழ்கி விபத்து சிக்கிய ஆறு மீனவர்கள் மீட்பு
ADDED : ஆக 23, 2026 11:03 PM

மங்களூரு: மீன் பிடி படகு, அலைகளில் சிக்கி, கடலில் மூழ்கியது. அபாயத்தில் சிக்கிய ஆறு மீனவர்கள், சக மீனவர்களால் மீட்கப்பட்டனர்.
இது குறித்து, மீன் வளத்துறை இணை இயக்குநர் தர்ஷனா, நேற்று அளித்த பேட்டி:
தட்சிண கன்னடா மாவட்டம், பண்ட்வால் தாலுகாவை சேர்ந்த இப்ராகிம் கலீல் மூசா என்பவருக்கு சொந்தமான, 'ஆயான்' என்ற பெயர் கொண்ட மீன் பிடி படகு, ஆழக்கடலில் மீன் பிடிப்பதற்காக, நேற்று மாலை, பழைய மங்களூரு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. அதில் ஆறு மீனவர்கள் இருந்தனர்.
அந்த படகு அளிவேபாகிலை கடந்து செல்லும் போது, கடல் காற்றின் வேகம் அதிகரித்தது. அலைகளின் ஆர்ப்பரிப்பும் தீவிரமடைந்தது. இதன் விளைவாக படகு, கட்டுப்பாட்டை இழந்து மூழ்க துவங்கியது.
அதில் இருந்த மீனவர்கள், அபாயத்தில் சிக்கினர். அப்போது படகு மூழ்குவதை, அருகில் வேறு படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கவனித்தனர்.
உடனடியாக உதவிக்கு வந்த அவர்கள், கயிற்றின் உதவியுடன் அபாயத்தில் இருந்த, ஆறு மீனவர்களையும் மீட்டு, தங்களின் படகுக்கு அழைத்து கொண்டனர். மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
