ADDED : ஏப் 20, 2026 02:18 AM
மைசூரு: காவிரி ஆற்றில் விளையாடிய, ஆறு சுற்றுலா பயணியர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
உரூஸ் நிகழ்ச்சிக்காக பெங்களூரு மற்றும் தமிழகம் ஊட்டியில் இருந்து, எட்டு பேர் கொண்ட குழுவினர், மைசூரு மாவட்டம், கே.ஆர்.நகர் தாலுகாவில் உள்ள தர்காவுக்கு வந்தனர். நேற்று மதியம் கே.ஆர்.நகர் புறநகரின், அர்க்கேஸ்வரா கோவில் அருகில் பாயும் காவிரி ஆற்றுக்கு வந்தனர்.
இவர்கள் நீரில் இறங்கி நீச்சலடிக்கும் போது, ஒருவர் நீரில் மூழ்கினார். இவரை காப்பாற்ற முயற்சித்த மற்ற ஐவரும் நீரில் மூழ்கினர். மைசூரின் உதய கிரியை சேர்ந்த, தற்போது தமிழகம் ஊட்டியில் வசிக்கும் பாத்திமா, 42, பெங்களூரின், எஸ்.பி.ஆர்., லே - அவுட்டின், ஆட்டோ ஓட்டுநர் முகமது யாசின், 23, நேஹா கவுசர், 19, மைசூரின் உதயகிரியின் உஜீர், 5, பெங்களூரின், காடகவுடனஹள்ளியின் எம்மே ஐமான், 13, கே.ஆர்.நகரின் ஆஷீப் அகமது, 13, ஆகியோர் உயிரிழந்தனர்.
நீரில் மூழ்கி இறந்த ஆறு பேரும், நெருங்கிய உறவினர்கள். நீரில் மூழ்கி காப்பாற்றப்பட்ட சல்மா பானு, ஆசியா, ஜுபேதா மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
தகவலறிந்து அங்கு வந்த கே.ஆர்.நகர் போலீசார், தீயணைப்பு படையினர், உள்ளூர் நீச்சல் வீரர்களின் உதவியுடன், இறந்தவர்களின் உடல்களை எடுக்கின்றனர்.
.....புல் அவுட....
ஆற்றில் நீந்த சென்ற, ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்த தகவலை கேட்டு துயரம் அடைந்தேன். அவர்களின் ஆன்மாவுக்கு, அமைதி கிடைக்கட்டும். அவர்களை இழந்த துக்கத்தை சமாளிக்கும் சக்தியை, குடும்பத்தினருக்கு அளிக்கட்டும் என, கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். மனித நேயம் அடிப்படையில், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு சார்பில் தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்கள், விரைவில் குணமடைய வேண்டும் என, பிரார்த்திக்கிறேன்.
- சித்தராமையா, முதல்வர்
