ADDED : ஜூன் 22, 2026 10:41 PM

- நமது நிருபர் -
சுற்றிலும் பாயும் நேத்ராவதி ஆறு, கண்ணுக்கு எட்டிய துாரம் வரை பசுமை போர்வை, இயற்கை காட்சிகள் நிறைந்த மலை உச்சியில் அற்புதமான சோமநாதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஒரு முறை இங்கு சென்றால், திரும்பி வரவே மனம் வராது. இயற்கை ஆர்வலர்கள், ஆன்மிகவாதிகளுக்கு விருப்பமான இடம்.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு தாலுகாவின், இன்னோளி கிராமத்தில், மலை உச்சியில் சோமநாதேஸ்வரர் கோவில் உள்ளது. இது 2,000 ஆண்டுகள் பழமையானது. சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
பச்சை போர்வை மிகவும் அமைதியான சூழ்நிலையில், இத்திருத்தலம் அமைந்துள்ளது. மூன்று திசைகளில் நேத்ராவதி ஆறு பாய்கிறது. இத்தகைய கோவிலை காண்பது மிகவும் அரிது. மலை மீது நின்று பார்த்தால், கண்ணுக்கு எட்டிய துாரம் வரை, பச்சை நிற பட்டுச்சேலையை விரித்ததை போன்ற பசுமையான காட்சியை ரசிக்கலாம்.
சிறப்பு வரலாறு கொண்ட இக்கோவில், திப்பு சுல்தான் நடத்திய பீரங்கி தாக்குதலால் சேதமடைந்திருந்தது. பீரங்கியை வைத்து தாக்குதல் நடத்திய இடம், ' பீரங்கிபேட்' என, அழைக்கப்பட்டது. நாளடைவில் பரங்கிபேட் என, மாறியது. 1999ல் கிராமத்தினர் சேர்ந்து, கோவிலை சீரமைத்தனர். பக்தர்களின் முயற்சியால் 2007ல் இத்திருத்தலம் புது பொலிவு பெற்றது. ராணி அப்பக்கா ஆட்சி காலத்தில் இப்பகுதியில் பிரபலமாக இருந்த ஐந்து சோமேஸ்வரர் கோவிலில், இதுவும் ஒன்றாகும்.
குடும்ப ஒற்றுமை இங்கு சிவன், பார்வதி அருள் பாலிக்கின்றனர். இவர்களை தரிசித்தால் தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும், வாழ்வில் நிம்மதி, மகிழ்ச்சி ஏற்படும் என்பது ஐதீகம். மாலை நேரம் இந்த மலையில் சூரிய அஸ்தமனத்தை காண்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதை காண சுற்றுலா பயணியர் இங்கு வருகின்றனர். சூரிய அஸ்தமனத்தை பார்த்து விட்டு, சோமநாதேஸ்வரர், துர்கா பரமேஸ்வரியை தரிசனம் செய்கின்றனர்.
எப்படி செல்வது? மங்களூரில் இருந்து, கோனாஜி வழியாக சென்றால், கோவிலை எளிதில் அடையலாம். அனைத்து நகரங்களில் இருந்தும், மங்களூருக்கு அரசு பஸ்கள், ரயில்கள் இயக்கப் படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது.
விமானத்தில் வருவோர், மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி, இங்கிருந்து வாடகை வாகனத்தில் கோவிலுக்கு செல்லலாம்.
தரிசன நேரம்: காலை 7:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை.
தொலைபேசி எண்: 98807 61271
