ADDED : ஜூலை 29, 2025 01:40 AM

கர்நாடகாவின் பல பகுதிகள், புண்ணிய தலமாக விளங்குகின்றன. இவற்றில் மாகடியும் ஒன்றாகும். இங்குள்ள சோமேஸ்வரர் கோவில், வரலாற்று பிரசித்தி பெற்றதாகும். பக்தர்களை காந்தமாக இழுக்கிறது.
பெங்களூரு தெற்கு மாவட்டம், மாகடி தாலுகா புண்ணிய தலமாகும். இங்கு மாண்டவ்ய மகரிஷி தவம் செய்து, ரங்கநாத சுவாமியை பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம். முதலில் மாண்டவ்யகுடி என, அழைக்கப்பட்டது. காலப்போக்கில் மாகுடியாகி, இப்போது மாகடி என, அழைக்கின்றனர். 11ம் நுாற்றாண்டில் மாகடி முக்கியமான குடியிருப்பு பகுதியானது. அழகான மலைகள், அடர்த்தியான வனப்பகுதி நிறைந்த அற்புதமான நகராகும்.
கெம்பே கவுடா ஆட்சிக் காலத்தில், மாகடியில் கோட்டைகள் கட்டப்பட்டன. 16ம் நுாற்றாண்டில் கெம்பே கவுடாவின் நிர்வாக மையமாக இருந்தது. மாகடியில் உள்ள சோமேஸ்வரர் கோவிலை, கெம்பே கவுடா கட்டினார். இங்கு அவர் தர்பார் நடத்தியதற்கான அடையாளங்கள் இன்றைக்கும் உள்ளன.
இக்கோவிலில் பிரமராம்பிகாவுடன், சோமேஸ்வரர் அருள்பாலிக்கிறார். கெம்பே கவுடாவின் குல தெய்வம் கால பைரவேஸ்வரர். இவரது தாய், காசி யாத்திரை செல்ல விரும்பினார். அந்த காலத்தில் காசிக்கு செல்வோர், திரும்பி வருவர் என்பதற்கு உத்தரவாதம் இருக்காது. எனவே வயதான தாயை காசிக்கு அனுப்ப, கெம்பே கவுடா விரும்பவில்லை.
ரிஷிகள், பண்டிதர்கள், வித்வான்களுடன் கலந்தாலோசித்து, தாய்க்கு காசி யாத்திரையின் புண்ணியம் கிடைக்கும் நோக்கில், மாகடியின் சிறிய மலை மீது, சோமேஸ்வரர் கோவில் கட்டினார். காசியில் இருந்தே சாலிகிராம லிங்கம் கொண்டு வந்து, பிரதிஷ்டை செய்தாராம்.
இங்கு குடிகொண்டுள்ள சிவனை தரிசித்து, அபிஷேக தீர்த்த பிரசாதம் பெற்றால், உயிருக்கு வந்த ஆபத்து நீங்கும். தொழில், வர்த்தகம் செழிக்கும் என்பது, மக்களின் நம்பிக்கையாகும். சர்ப்ப தோஷம், நீரினால் ஏற்பட்ட கண்டம் விலகும். யாராவது பில்லி, சூன்யம் செய்திருந்தாலும் சிவனை தரிசித்தால் தீவினை விலகும்.
அபிஷேகம் முடிந்த பின், சர்வ அலங்காரத்தில் சிவ லிங்கத்தின் அழகு பல மடங்காக அதிகரிக்கும். கோவிலின் உள் வளாகத்தில் விநாயகர் விக்ரகம் உள்ளது. கம்பங்களிலும் விநாயகர் சிற்பங்கள் உள்ளன. 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோவிலுக்கு, அற்புதமான சக்தி உள்ளது. கோவில் வாசல் வரை வாகனங்கள் செல்லும் வகையில், சாலை அமைக்கப்பட்டுள்ளது.
நுழைவாசல் கல் கம்பங்களில் அழகான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. உள்ளே நுழைந்தவுடன் இடது புறம் யாகசாலை அமைந்துள்ளது. இங்கு தினமும் யாகங்கள் நடக்கின்றன. ஆண்டின் 365 நாட்களும் சுத்தமான குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கோவில் அருகிலேயே புராதனமான கிணறு உள்ளது. கோவிலின் பின் பகுதியிலும் ஒரு நுழை வாசல் உள்ளது. பிரமாண்டமான ராஜகோபுரம் உள்ளது. கர்ப்பகுடி முன்பாக நந்தி சிலை அமைந்துள்ளது.
அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ள கோவிலை பார்ப்பதே, மிகப்பெரிய புண்ணியம். வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கும். ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில், இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம். குறிப்பாக பிரதோஷ நாட்களில் திரளான பக்தர்கள், சோமேஸ்வரரை தரிசனம் செய்வர்.
- நமது நிருபர் -