ADDED : ஜன 12, 2026 06:41 AM
ஹாசன்: குடும்ப பிரச்னையால் தந்தையை அடித்து கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.
ஹாசன் மாவட்டம், சென்னராயபட்டணா தாலுகாவின் ஹிரிசாவே கிராமத்தில் வசிப்பவர் சதீஷ், 60. இவரது மனைவி நிர்மலா, 55. இவர்களுக்கு ரஞ்சித், 28, என்ற மகன் உள்ளார்.
சதீஷ் குடும்பத்தை சரியாக கவனிக்காமல், அலட்சியம் காட்டினார். அது மட்டுமின்றி, வேறு பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது.
மனைவியும், மகனும் பல முறை அறிவுரை கூறியும், சதீஷ் மாறவில்லை. இவரது செயலால் வெறுப்படைந்த தாயும், மகனும் மைசூரு மாவட்டம், கே.ஆர்.நகரில் தனியாக வசிக்கின்றனர்.
இது, சதீஷுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. மகனுடன் தகராறு செய்தார். நேற்று முன்தினம் தாயும், மகனும் ஹிரிசாவே கிராமத்துக்கு வந்தனர்.
நள்ளிரவு வழக்கம் போன்று, தந்தைக்கும், மகனுக்கும் வாக்குவாதம் நடந்தது. அப்போது கோபமடைந்த ரஞ்சித், இரும்புத்தடியால் தந்தையின் மண்டையில் ஓங்கி அடித்தார்.
இதில் காயமடைந்த சதீஷ், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு வந்த ஹிரிசாவே போலீசார், உடலை மீட்டனர். ரஞ்சித்தை கைது செய்தனர்.

