/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சீனா பாணியில் ரூ.6,000 கோடியில் ரயில் முனையம்; எலஹங்காவில் அமைக்க தென்மேற்கு ரயில்வே திட்டம்
/
சீனா பாணியில் ரூ.6,000 கோடியில் ரயில் முனையம்; எலஹங்காவில் அமைக்க தென்மேற்கு ரயில்வே திட்டம்
சீனா பாணியில் ரூ.6,000 கோடியில் ரயில் முனையம்; எலஹங்காவில் அமைக்க தென்மேற்கு ரயில்வே திட்டம்
சீனா பாணியில் ரூ.6,000 கோடியில் ரயில் முனையம்; எலஹங்காவில் அமைக்க தென்மேற்கு ரயில்வே திட்டம்
ADDED : டிச 25, 2025 06:44 AM
பெங்களூரு: சீனாவின் ஹங்ஷு ரயில்வே முனையம் மாதிரியில் பெங்களூரின் எலஹங்காவில், 6,000 கோடி ரூபாயில் ரயில் முனையம் கட்ட, ரயில்வே வாரியத்திடம், தென்மேற்கு ரயில்வே முன்மொழிந்துள்ளது.
பெங்களூரில் ஏற்கனவே மெஜஸ்டிக், யஷ்வந்த்பூர், பையப்பனஹள்ளியில் உள்ள சர் எம்.விஸ்வேஸ்வரய்யா ரயில்வே முனையம் அமைந்து உள்ளது. நகருக்கு வருகை தரும் மக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மூன்று ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
இதை நிவர்த்தி செய்ய, தேவனஹள்ளியில், ரயில்வே முனையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், நிலம் எடுப்பதில் பல பிரச்னைகள் உள்ளன. இந்நிலையில், ரயில்வே வாரியத்துக்கு, தென்மேற்கு ரயில்வே முன்மொழிவு சமர்ப்பித்துள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
பெங்களூரு தேவனஹள்ளியில் நான்காவது ரயில்வே முனையத்துக்கு நிலம் கிடைக்காததால், எலஹங்காவுக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
எலஹங்காவில் ரயில்வே வீல் பேக்டரிக்கு சொந்தமாக 192 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், 20 ஏக்கர் நிலத்தை ரயில்வே முனையத்துக்கு பயன்படுத்தலாம். தற்போது எலஹங்காவில் 5 பிளாட்பார்ம்கள் உள்ளன. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், மொத்தம் 16 பிளாட்பார்ம்கள் அமைக்கலாம்.
அத்துடன், இயக்கப்படாத ரயில்களை நிறுத்த 10 தனி ரயில்பாதைகள்; பராமரிப்பு, ஆய்வு, சுத்தம் செய்ய என 15 'பிட்' ரயில் பாதைகளும் அமைக்கலாம்.
விமான நிலையங்கள் இயக்கப்படுவது போன்று அடித்தளம், தரை தளம் மற்றும் மூன்று மேல் தளங்கள் இருக்கும். விமான நிலையத்தில் இருப்பது போன்று அனைத்து வசதிகளும் இடம் பெறும்.
இந்த முனையம், விரைவில் மெட்ரோ நீளப்பாதையில் அமைய உள்ள கோகிலு கிராஸ் மெட்ரோ நிலையத்துடன் இணைக்கப்படும். எலஹங்கா - தொட்டபல்லாபூர் நெடுஞ்சாலையில் முனையத்தின் பிரதான நுழைவு வாயில் அமைக்கப்படும்.
சீனாவின் ஹங்ஷு ரயில் முனையம் போன்று, பயணியர் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ரயில் புறப்பாடு, வருகை பகுதி பிரிக்கப்படும். அதாவது ரயில் நிலையத்திற்கு வருவோர் முதல் தளம் வழியாகவும், வெளியேறுவோர் அடித்தளம் வழியாகவும் செல்லலாம். ரயிலில் செல்வோர், டிக்கெட் வாங்கிக் கொண்டு, ஓய்வு அறையில் காத்திருக்க வேண்டும். அவர்கள் செல்லும் ரயில் வந்தவுடன், பிளாட்பாரத்திற்கு செல்லலாம்.
பெங்களூரு வடக்கு பகுதி வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போதுள்ள ரயில் நிலையங்களில் நெரிசலை தவிர்க்க, எலஹங்காவில் ரயில் முனையம் அமைவது அவசியம். இத்திட்டத்துக்காக 6,000 கோடி ரூபாய் செலவாகும். பி.பி.பி., எனும் பொது தனியார் கூட்டமைப்பில் செயல்படுத்தலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தென்மேற்கு ரயில்வே பெங்களூரு பிரிவு மேலாளர் அசுதோஷ் சிங் கூறுகையில், ''எலஹங்காவில் ரயில் முனையம் அமைக்க, ரயில்வே வாரியத்திடம் முன்மொழிவு சமர்ப்பித்து உள்ளோம். இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. பெங்களூரில் நிலத்தின் விலை அதிகரித்து வருவதாலும், அதிகரித்து வரும் பயணியர் எண்ணிக்கையை கையாள, பிரமாண்டமான முனையம் அவசியம்,'' என்றார்.

