/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வீரருக்கு பரிசுத்தொகை வழங்குவதில் அலட்சியம்; விளையாட்டு அதிகாரிகளுக்கு ரூ.2 லட்சம் அபராதம்
/
வீரருக்கு பரிசுத்தொகை வழங்குவதில் அலட்சியம்; விளையாட்டு அதிகாரிகளுக்கு ரூ.2 லட்சம் அபராதம்
வீரருக்கு பரிசுத்தொகை வழங்குவதில் அலட்சியம்; விளையாட்டு அதிகாரிகளுக்கு ரூ.2 லட்சம் அபராதம்
வீரருக்கு பரிசுத்தொகை வழங்குவதில் அலட்சியம்; விளையாட்டு அதிகாரிகளுக்கு ரூ.2 லட்சம் அபராதம்
ADDED : ஜூலை 23, 2025 07:52 AM

பெங்களூரு: 'தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் வீரருக்கு அறிவிக்கப்பட்ட தொகையில் ஆறு ஆண்டுகளாக வழங்கபடாமல் உள்ள 1.26 லட்சம் ரூபாயை, 2 வாரங்களுக்குள் அரசு வழங்க வேண்டும். அலட்சியமாக செயல்பட்ட சம்பந்தப்பட்ட இளைஞர் அதிகாரமளித்தல் விளையாட்டு துறை அதிகாரிகளுக்கு இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதை, தங்கள் சொந்த பணத்தில் இருந்து அவர்கள் வழங்க வேண்டும்' என, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர் விஸ்வாஸ், 34. இவருக்கு, 10 வயதாக இருந்தபோது, வீட்டின் மொட்டை மாடியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றியபோது, தவறி மின் கம்பி மீது விழுந்தார். மின்சாரம் பாய்ந்து, இரண்டு மாதங்கள், 'கோமா'வில் இருந்தார். இரு கைகளையும் இழந்தார்.
பதக்கங்கள் ஆனாலும், மனம் தளராமல் விளையாட்டில் ஆர்வமாக ஈடுபட்டார். தேசிய, சர்வதேச அளவில் பல நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை பெற்றார். 2016 முதல் 2018 காலகட்டத்தில், பல தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை வென்றார்.
இவரின் சேவையை பாராட்டி, மாநில அரசு, 6 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்தது. இதில், 4.74 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. மீதமுள்ள 1.26 லட்சம் ரூபாய் வழங்கப்படவில்லை. பல முறை முறையிட்டும் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் கர்நாடக உயர் நீதிமன்றத்தில், விஸ்வாஸ் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, நேற்று முன்தினம் அளித்த தீர்ப்பு:
வாழ்க்கையில் பெரும் தடைகளை தாண்டிய ஒருவரின் அரிய சாதனையை பற்றி அனைவரும் பெருமைப்பட வேண்டும். அரசு, தன் மனம் திறந்து, சிறப்பு திறமை கொண்ட மனித உணர்வுக்கு இரக்கம் காட்ட வேண்டும்.
எச்சரிக்கை இருப்பினும் இவ்வழக்கில், மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து, அதிகாரிகள் இரக்கமற்ற தன்மையை வெளிப்படுத்தி உள்ளனர். இது நீதியின் கண்ணியத்தை குறைப்பதற்கு சமமாகும். எனவே, பொறுப்பான அதிகாரிகளை எச்சரிக்க வேண்டிய நேரமிது.
மனுதாரர் விஸ்வாஸ், 2016 முதல் 2018 வரை பல இடங்களில் நடந்த போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை வென்றுள்ளார் என்பது தெளிவாகிறது. இருப்பினும், ஆறு ஆண்டுகள் ஆன பின்னரும், அவரின் சாதனைக்காக அறிவிக்கப்பட்ட முழு தொகையும் வழங்கப்படவில்லை.
அபராதம் இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளே காரணம். ஒரு ரூபாய் கூட கொடுக்காமல், மனுதாரரை அலைய விட்டதற்கு, அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும்.
எனவே, நிலுவையில் உள்ள 1.26 லட்சம் ரூபாய் தொகையை மனுதாரருக்கு இரண்டு வாரங்களுக்குள் அரசு வழங்க வேண்டும். பணம் செலுத்த தவறினால், முழு தொகையும் விஸ்வாசுக்கு கிடைக்கும் வரை, தினமும் 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
அலட்சியமாக செயல்பட்ட சம்பந்தப்பட்ட இளைஞர் அதிகாரமளித்தல் விளையாட்டுத் துறை அதிகாரிகளுக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் படுகிறது. இதை, தங்கள் சொந்த பணத்தில் இருந்து அவர்கள் வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.