பெண்கள் ஆர்.சி.பி., அணியில் ஸ்ரேயங்காவுக்கு மீண்டும் வாய்ப்பு
பெண்கள் ஆர்.சி.பி., அணியில் ஸ்ரேயங்காவுக்கு மீண்டும் வாய்ப்பு
ADDED : ஜன 09, 2026 06:28 AM

ஐ.பி.எல்., பெண்கள், 'டி20' போட்டியில் கர்நாடகாவை சேர்ந்த ஸ்ரேயங்கா பாட்டீலை, ஆர்.சி.பி., அணி மீண்டும் தேர்வு செய்துள்ளது.
ஆண்கள் ஐ.பி.எல்., டி 20 போட்டி போன்றே, பெண்களுக்கான 'டி20' போட்டிகள் இன்று (9ம் தேதி) முதல் பிப்., 9 ம் தேதி வரை நடக்கின்றன. இதில், ஆர்.சி.பி., பெண்கள் அணியில், பெங்களூரை சேர்ந்த ஸ்ரேயங்கா பாட்டீலுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
பயிற்சியின் போதும், விளையாட்டின் போதும் ஏற்பட்ட தொடர் காயங்களால், சில போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், இந்தாண்டு நடக்கும் பெண்கள் டி20 போட்டியில் எனக்கு வாய்ப்பு கிடைக்காது என்றே நினைத்தேன். ஆனால், என்னை ஆர். சி.பி., அணி நிர்வாகம் தேர்வு செய்த தகவல் கேட்டு, உணர்ச்சி பெருக்கால் என்னால் பேச முடியவில்லை. உடல்நிலை சரியான பின், மீண்டும் பயிற்சி முகாமில் பங்கேற்றேன். இந்திய கிரிக்கெட் வீரர் ஜாஸ்பிரிட் பூம்ப்ரா, உடலில் காயம் ஏற்படாமல் இருப்பது குறித்தும், மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வருவது எப்படி என்பது குறித்தும் சில ஆலோசனைகள் வழங்கினார். இந்தாண்டு நடக்கும் டபிள்யூ.பி.எல்.,லில் சிறப்பாக விளையாடி, இந்திய அணியில் இடம் பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -:.

