/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
2,600 அடி உயர மலையில் சீனிவாசா கோவில்
/
2,600 அடி உயர மலையில் சீனிவாசா கோவில்
ADDED : அக் 28, 2025 04:24 AM

மாண்டியாவின் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா, கரிகட்டா கிராமத்தில், மலை உச்சியில் அமைந்துள்ளது சீனிவாசா கோவில். கடல் மட்டத்தில் இருந்து, 2,697 அடி உயரத்தில் இருக்கும் இக்கோவில் வைகுண்ட சீனிவாசருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
கருவறையில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட, 6 அடி உயர விஷ்ணு சிலை உள்ளது. மலை அடிவாரத்தில் இருந்து உச்சிக்கு 450 படிக்கட்டுகளில் ஏறி செல்ல வேண்டும். கோவிலுக்கு செல்ல சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. அடிவாரத்தில் இருந்து உச்சிக்கு வாகனங்களிலும் செல்ல முடியும் .
வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் பயணம் செய்வது புதிய அனுபவமாக இருக்கும். மலை உச்சிக்கு ஏறி செல்லும்போது காவிரி ஆற்றின் வலது, இடது கரையை ரசிக்கலாம்.
கரிகட்டா மலை, வரலாறு, புராணக் கதைகளுடன் தொடர்புடையது. சீனிவாசரின் பக்தர்களான நான்கு கன்னிப்பெண்கள் உடல் நலக்குறைவால் உயிருக்கு போராடிய போது, அந்த பெண்கள் உயிர் பிழைக்க வேண்டி குச்சமுனி முனிவர் தனது தவத்தை முடித்த போது இந்த கோவில் கட்டப்பட்டது.
ஒரு புராண கதையின்படி, ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு பாலம் கட்ட சுக்ரீவர், இங்கிருந்து மலையை கொண்டு சென்றார் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் இந்த கோவிலுக்கு ராமாயண கால கதையும் உள்ளது.
கோவிலின் கட்டடக்கலையும், நுழைவு வாயிலின் பிரமாண்ட மரக்கதவும் பக்தர்களை வெகுவாக கவருகிறது. கோவிலில் பத்மாவதி தாய்க்கு தனி சிலை உள்ளது. இது தவிர கோவிலில் விஷ்ணுவின் பாதம் உள்ளது.
வாழ்க்கையில் கடும் பிரச்னையால் அவதிப்படுவோர் இங்கு வந்து பூஜை, சடங்குகள் செய்தால் வாழ்வில் நேர்மறையான மாற்றம் ஏற்படக்கூடும்.
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் காலை 10:00 மணி முதல் இரவு 7 :00 மணி வரை கோவில் திறந்திருக்கும்.
-- நமது நிருபர் --

