'நீட்' தேர்வு எழுத முடியாத மாணவர்கள் வருத்தம் தெரிவித்த மாநில காங்., தலைவர்
'நீட்' தேர்வு எழுத முடியாத மாணவர்கள் வருத்தம் தெரிவித்த மாநில காங்., தலைவர்
ADDED : ஜூன் 22, 2026 11:44 PM

பெங்களூரு: ''காங்கிரஸ் கூட்டத்தால் நீட் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறோம்,'' என மாநில காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத் வருத்தம் தெரிவித்தார்.
'நீட்' மறுதேர்வு நேற்று முன்தினம் நடந்தது. பெங்களூரு ஆர்.சி., கல்லுாரியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்ததால், மூன்று மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. அவர்கள் கண்ணீர் விட்டும், தேர்வு மைய அதிகாரிகள் மனம் இரங்கவில்லை.
இது குறித்து, பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா கூறுகையில், ''நாடு முழுதும் நீட் மறுதேர்வு நடப்பது பற்றி தெரிந்திருந்தும், காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத் பதவியேற்பு விழாவை நேற்று முன்தினம் நடத்தியது ஏன். அரண்மனை மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட, போக்குவரத்து நெரிசலால் தான் மூன்று மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் போனது,'' என்றார்.
காங்., மாநில தலைவர் ஹரிபிரசாத் நேற்று அளித்த பேட்டி:
நேற்று (முன்தினம்) காங்கிரஸ் கூட்டத்தின்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது உண்மை தான். பொது மக்களுக்கு சிரமம் ஏற்படக்கூடாது என்பதற்காக ஞாயிற்று கிழமை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தோம். சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டதை நாங்கள் மறுக்கவில்லை.
ஆனால், எங்கள் நிகழ்ச்சியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, இரண்டு மூன்று மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்க முடியவில்லை என்ற செய்தியை பார்த்தேன். இந்நிகழ்ச்சி காரணமாக, அத்தகைய தவறு நடந்திருந்தால் நாங்கள் வருந்துகிறோம்.
அவர்கள் அடுத்த தேர்வை எழுத தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் குழுவினர், அவர்களை சந்தித்து, அவர்கள் அடைந்த இழப்பிற்கு ஈடுசெய்ய தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கூறுகையில், ''தேர்வு எழுத முடியாமல் போன மூன்று பேரில், ஒரு மாணவி மாகடியில் இருந்து வந்துள்ளார். அந்த பகுதியில் எங்கள் நிகழ்ச்சி நடந்ததா. ஆர்.சி., கல்லுாரி மையத்தில் தேர்வு எழுத 720 பேருக்கு ஹால் டிக்கெட் கொடுக்கப்பட்டது. அதில், 100க்கும் மேற்பட்டோர் வரவே இல்லை. இதற்கும் நாங்கள் தான் காரணமா?,'' என கூறியுள்ளார்.
