/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முறையான ஒருங்கிணைப்பில்லாமல் நெரிசல் 11 பேர் பலி குறித்து மாநில அரசு அறிக்கை
/
முறையான ஒருங்கிணைப்பில்லாமல் நெரிசல் 11 பேர் பலி குறித்து மாநில அரசு அறிக்கை
முறையான ஒருங்கிணைப்பில்லாமல் நெரிசல் 11 பேர் பலி குறித்து மாநில அரசு அறிக்கை
முறையான ஒருங்கிணைப்பில்லாமல் நெரிசல் 11 பேர் பலி குறித்து மாநில அரசு அறிக்கை
ADDED : ஜூலை 16, 2025 11:01 PM
பெங்களூரு: 'ஆர்.சி.பி., வெற்றி கொண்டாட்ட விழாவை முறையாக ஒருங்கிணைக்காததே, கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு காரணம்' என, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஐ.பி.எல்., கிரிக்கெட்டின் 18 ஆண்டு வரலாற்றில், ஆர்.சி.பி., அணி முதன்முறையாக வெற்றி பெற்றது.
இதை கொண்டாடும் வகையில், பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இது தொடர்பான வழக்கு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி காமேஸ்வர் ராவ் முன்னிலையில் நடந்து வருகிறது.
முதல்கட்ட விசாரணை
சம்பவம் தொடர்பான முதல்கட்ட விசாரணை அறிக்கையை, நீதிமன்றத்தில், மாநில அரசு சமர்ப்பித்தது.
அத்துடன், நீதித்துறை ஆணையம் மற்றும் மாஜிஸ்திரேட் விசாரணையின் அறிக்கை கிடைக்கும் வரை, இந்த அறிக்கையை வெளியிட வேண்டாம் என்று அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனாலும், ஜூலை 8 விசாரணையின்போது, மனுதாரருக்கு இந்த அறிக்கையை வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
இத்தகைய நிகழ்ச்சிக்கு மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டியது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் கடமை, பொறுப்புமாகும்.
ஆனால் அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. முதலுதவி ஏற்பாடுகளை செய்யவும் தவறிவிட்டனர்.
நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கும் கோரிக்கையை, முன்னரே சமர்ப்பித்திருந்தால், தேவையான ஏற்பாடுகள் செய்திருக்கலாம். அதையும் அவர்கள் செய்யவில்லை.
ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் கொண்ட இரு மருத்துவ குழுக்கள், ஒரு ஆம்புலன்ஸ், தீயணைப்பு மீட்பு வாகனத்தை மாநில அரசு நிறுத்தியது.
பிரமாண்டமான கொண்டாட்டத்தின்போது, மருத்துவ அவசர வசதிகள் செய்ய வேண்டும் என்பதை அறிந்தும், ஏற்பாட்டாளர்கள் அலட்சியம் காட்டி உள்ளனர்.
புதிய கொள்கை
கொண்டாட்டத்தில் எத்தனை பேர் பங்கேற்பர் என்பதை கணக்கிட, போலீசாருக்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை. கொண்டாட்டத்தை காண வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அவர்களும் எதிர்பார்க்கவில்லை.
கொண்டாட்டத்துக்கு முன்னதாக, போக்குவரத்தை கட்டுப்படுத்த, 654 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பின், விதான் சவுதா, சின்னசாமி மைதானத்திற்கு செல்லும் பாதையில், கூடுதலாக 440 பேர் கொண்ட 20 கே.எஸ்.ஆர்.பி., குழுவினர், ஆறு டி.சி.பி.,க்கள், போலீஸ் பயிற்சியில் ஈடுபட்டுள்ள 200 பேர் வரவழைக்கப்பட்டனர்.
சம்பவத்தை கேள்விப்பட்ட நகர போலீஸ் கமிஷனர், பெங்களூரு நகர போலீஸ் நிலையங்களுக்கு போன் செய்து, போலீஸ் நிலையத்தில் உள்ள ஊழியர்களுடன் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்துக்கு விரைந்து செல்லும்படி உத்தரவிட்டு உள்ளார்.
இச்சம்பவத்துக்கு பின், இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அதிகளவில் மக்கள் கூடுவதை கட்டுப்படுத்த, புதிய குறிப்பிட்ட கொள்கையை உருவாக்கும் செயல்முறையை, மாநில அரசு துவங்கி உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.