உத்தரவில் திருத்தம் கோரிய தர்ஷனின் மனு: சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி
உத்தரவில் திருத்தம் கோரிய தர்ஷனின் மனு: சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி
ADDED : ஜூலை 03, 2026 11:20 PM

- நமது நிருபர் -
'ஓராண்டு ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்ய கூடாது' என்ற, உச்ச நீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரிய நடிகர் தர்ஷனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சித்ரதுர்காவின் ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா உட்பட, 17 பேர் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
மருத்துவ காரணங்களுக்காக தர்ஷனுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. பவித்ரா உள்ளிட்டோருக்கும் ஜாமின் கிடைத்துள்ளது.
இதை எதிர்த்து அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமினை ரத்து செய்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தர்ஷன் உட்பட, 17 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஜாமின் கேட்டு தர்ஷன் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள், 'ஓராண்டிற்கு ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்ய கூடாது' என உத்தரவிட்டனர். பெங்களூரு கோர்ட்டில் நடக்கும் விசாரணையை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், ஓராண்டு ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்ய கூடாது என்ற உத்தரவில் திருத்தம் செய்ய கோரி, உச்ச நீதிமன்றத்தில் தர்ஷன் தரப்பில் மனு செய்யப்பட்டது.
மனுவை ஆய்வு செய்த உச்ச நீதிமன்ற பதிவாளர், 'இந்த மனு விசாரணைக்கு ஏற்றதே இல்லை' என நேற்று தள்ளுபடி செய்தார். இதனால் தர்ஷன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதற்கிடையே, ரேணுகாசாமி கொலை வழக்கு சாட்சியான சந்தீப்பை மிரட்டிய வழக்கில், தர்ஷன் ஆதரவாளர்கள் புனித், சுஹாஸ், வேணு ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அவர்களை காவலில் எடுத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
அவர்களின் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுக்க, தடய ஆய்வக மையத்திற்கு அந்த மொபைல் போன்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
