/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'பாமுல்' தலைவராக சுரேஷ் போட்டியின்றி தேர்வு
/
'பாமுல்' தலைவராக சுரேஷ் போட்டியின்றி தேர்வு
ADDED : ஜூன் 19, 2025 11:31 PM

பெங்களூரு: 'பாமுல்' எனும் பெங்களூரு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக, துணை முதல்வர் சிவகுமாரின் தம்பி சுரேஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு நகரம், பெங்களூரு ரூரல், ராம்நகர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், 'பாமுல்' என்ற அழைக்கப்படுகிறது.
இந்த சங்கத்திற்கு மூன்று மாவட்டங்களில் இருந்து 16 புதிய இயக்குநர்களை தேர்வு செய்ய, கடந்த மாதம் தேர்தல் நடந்தது.
கனகபுரா தொகுதியில் இருந்து துணை முதல்வர் சிவகுமாரின் தம்பி சுரேஷ் இயக்குநர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததால், போட்டியின்றி இயக்குநர் பதவிக்கு தேர்வாகியுள்ளார்.
காங்கிரசின் மேலும் 13 பேரும் இயக்குநர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இருவரை அரசு நியமித்தது.
இந்நிலையில், 'பாமுல்' தலைவர் பதவிக்கு நேற்று வேட்புமனுத் தாக்கல் நடந்தது. அந்த பதவிக்கு சுரேஷ் வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேறு யாரும் எதிர்த்து போட்டியிடாதால், 'பாமுல்' தலைவராக சுரேஷ் தேர்வாகி உள்ளதாக, அதிகாரிகள் அறிவித்தனர்.
பின், சுரேஷ் அளித்த பேட்டி:
'பாமுல்' தலைவர், துணை தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் தலைவராக என்னையும், துணை தலைவராக குதுார் ராஜண்ணாவையும் ஒருமனதாக இயக்குநர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இந்த நேரத்தில் துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் ராமலிங்கரெட்டி, முனியப்பா, கிருஷ்ணபைரேகவுடா, எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
விவசாயிகள், என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களுக்கு நியாயம் கிடைக்க போராடுவேன்.
பாமுலின் கனகபுரா தொகுதியில் இருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பால் பாக்கெட்டுகள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. மாநிலம் முழுதும் அமல்படுத்துவது பற்றி யோசித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரு ரூரல் தொகுதியில் இருந்து சுரேஷ், மூன்று முறை எம்.பி.,யாக இருந்தவர். கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தோற்றார்.
எம்.பி.,யாக இருந்தவர் ஏன், பால் கூட்டுறவு சங்கத்திற்கு போட்டியிடுகிறார் என்று கேள்வி எழலாம். கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் கூட்டமைப்பு தலைவர் பதவியை கைப்பற்ற சுரேஷ் அடிபோடுவது குறிப்பிடத்தக்கது.