/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தமிழ் கலாசாரம், கல்வி அறக்கட்டளை துவக்க விழா
/
தமிழ் கலாசாரம், கல்வி அறக்கட்டளை துவக்க விழா
ADDED : செப் 30, 2025 05:50 AM

பெங்களூரு: தட்சிண கன்னடா மாவட்டம், சுள்ளியாவில் தமிழ் கலாசாரம் மற்றும் கல்வி அறக்கட்டளை துவக்கப்பட்டுள்ளது.
அறக்கட்டளையை துவக்கி வைத்து, தாய் மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், பெங்களூரு திருவள்ளுவர் சங்க தலைவருமான எஸ்.டி.குமார் பேசியதாவது:
சுள்ளியாவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அதன் பின் இலங்கை சென்றனர். ஒப்பந்தப்படி மீண்டும் இந்தியாவுக்கு கூலி வேலைக்காக அழைத்து வரப்பட்டனர்.
ஆனால், அவர்களுக்கு பட்டா உட்பட வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. அவர்களிடம் ஆதார் கார்டு உள்ளது; ரேஷன் கார்டு கிடையாது. வாக்காளர் அடையாள அட்டை உள்ளது; மற்ற சலுகைகள் எதுவும் கிடையாது.
இலங்கையில் இருந்து வந்தவர்கள் என்ற காரணத்தால், இவர்களுக்கு இதுவரை அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை. மூன்று தலைமுறையாக வாழும் அவர்களுக்கு, தேவையான வசதிகளை மத்திய அரசு செய்து தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தாய் மொழி கூட்டமைப்பு சார்பில், கல்வி அறக்கட்டளைக்கு, 21 ஆயிரம் ரூபாயை எஸ்.டி.குமார் வழங்கினார். தாயகம் திரும்பியோர் நல கூட்டமைப்பு நிறுவனரும், ரெப்கோ வங்கி முன்னாள் இயக்குநருமான முனீஸ்வர் கணேசன், மகாலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.