UPDATED : நவ 29, 2026 12:00 AM
ADDED : நவ 28, 2026 07:00 PM

- நமது நிருபர் -
இரண்டு மகன்கள் உயர் பதவியில் இருந்தும், 77 வயதாகும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர், விவசாயத்தில் புரட்சி செய்துள்ளார். இவரது சுறுசுறுப்பை பார்த்து, இளைஞர்களே வெட்கப்படுகின்றனர்.
பெலகாவி மாவட்டம், கோகாக் தாலுகாவின், அக்கதங்கேரஹாளா கிராமத்தில் வசிப்பவர் சித்தப்பா பசவன்னப்பா ஹொளியாசி, 77, இவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
பொதுவாக பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின், பலரும் தங்களின் பேரப்பிள்ளைகளுடன் விளையாடி பொழுது போக்குவர். ஓய்வாக இருக்கவே விரும்புவர். ஆனால் இந்த வயதிலும், சித்தப்பா இளைஞர்களே வெட்கப்படும் அளவுக்கு, சுறுசுறுப்பாக செயல்படுகிறார்.
பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், அவர் வீட்டில் அமர்ந்திருக்கவில்லை. கடந்த, 18 ஆண்டுகளாக விவசாயத்தில் ஈடுபடுகிறார். தனக்கு சொந்தமான ஒன்பது ஏக்கர் நிலத்தில், விவசாயம் செய்கிறார்.
ஒரே பயிர் விளைச்சலை நம்பியிராமல் தக்காளி, முருங்கைக்காய், கறிவேப்பிலை, முட்டைக்கோஸ், பப்பாளி, சீத்தாப்பழம், டிராகன் ப்ரூட்ஸ், தென்னை, எலுமிச்சை, அவகாடோ, மியாஜாகி மாம்பழம் உட்பட, 35க்கும் மேற்பட்ட பயிர்களை விளைவிக்கிறார். பயிர்களும் செழிப்பாக வளர்ந்துள்ளன.
இயற்கை முறையில் விவசாயம் செய்கிறார். ரசாயணம் பயன்படுத்துவது இல்லை.
இவரது மூத்த மகன் பசவராஜ், மேற்கு வங்கத்தில் வன பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றுகிறார்.
இளைய மகன் சந்தோஷ் பொறியியல் முடித்து, தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இரண்டு மகன்களும் உயர் பதவியில் இருந்தும், சித்தப்பா விவசாயத்தில் ஆர்வம் காட்டுகிறார்.
பணத்துக்கு கஷ்டம் இல்லை என்றாலும், உழைப்புக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார். உடலில் சக்தி இருக்கும் வரை உழைக்க வேண்டும் உறுதியுடன் இருக்கிறார்.
தினமும் பயிர்களை கவனிப்பது, புதிய பயிர்களை பற்றி தகவல் சேகரிப்பது, விவசாயத்தில் புதுமையை கொண்டு வர முயற்சிப்பது, அவரது அன்றாட பணியாகும். சில ஆண்டுகளுக்கு முன், நர்சரியை திறந்துள்ளார்.
இதில் காய்கறி செடிகளை வளர்த்து, விற்பனை செய்கிறார். நிலம் முழுதும் சொட்டு நீர் பாசன வசதி செய்துள்ளார். மோட்டாருக்கு சோலார் மின்சாரம் பயன்படுத்துகிறார்.
சித்தப்பா ஹொளியாசி கூறியதாவது:
எனக்கு சிறு வயதில் இருந்தே, விவசாயத்தில் ஆர்வம் அதிகம். ஆசிரியர் தொழிலில் இருந்த போதும், மண்ணுடனான தொடர்பை இழக்கவில்லை. ஓய்வுபெற்ற பின், முழு விவசாயியாக மாறினேன். இதற்கு முன், கிரீன் ஹவுசில் புருகோலி உட்பட, பல விதமான வெளிநாட்டு காய்கறிகளை வளர்த்து, அதிக வருவாய் சம்பாதித்தேன். இப்போது, 25க்கும் மேற்பட்ட காய்கறிகள், பழங்கள் வளர்க்கிறேன்.
பணிக்காக பெரிய நகரங்களுக்கு சென்று, 10,000 ரூபாய், 15,000 ரூபாய் சம்பாதிப்பதற்கு பதில், சொந்த மண்ணில் சொற்ப நிலத்தில் விவசாயம் செய்தால், நல்ல வருவாய் சம்பாதிக்கலாம். விவசாயம் செய்து செல்வந்தராக முடியாமல் போகலாம். ஆனால் சுகமாக வாழலாம். விவசாயத்தை மகிழ்ச்சியோடு செய்ய வேண்டும்.
பூமித்தாய் மீது நம்பிக்கை வைத்து, உழைத்தால் அந்த தாய் நம்மை கைவிட மாட்டார். விவசாயத்தை பகுதி நேர வேலையாக பார்க்காமல், முழு நேர பணியாக செய்தால், வெற்றி பெற முடியும்.
ஒரு விஞ்ஞானி ஆய்வகத்தில் எப்படி ஆராய்ச்சி செய்கிறாரோ, அது போல விவசாயிகளும், தங்களின் தோட்டத்தை ஆய்வகமாக மாற்றி கொள்ள வேண்டும். விவசாயம், தோட்டக் கலைத்துறை அதிகாரிகளிடம் தகவல் பெற்று, அதிநவீன தொழில்நுட்பத்தை விவசாயத்தில் பயன்படுத்த வேண்டும்.
விவசாயிகள் ஒரே பயிர் விளைச்சலை நம்பி இருக்க கூடாது. பல பயிர்களை பயிரிட வேண்டும். ஒரு விளைச்சல் கை விட்டாலும், மற்றொன்று கை கொடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
