சொத்து குவித்த வழக்கில் 'மாஜி'க்கு தற்காலிக நிம்மதி
சொத்து குவித்த வழக்கில் 'மாஜி'க்கு தற்காலிக நிம்மதி
ADDED : ஜூலை 15, 2026 11:40 PM

பெங்களூரு: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக, முன்னாள் அமைச்சர் ஜமீர் அகமது கான் மீது வழக்கு தொடர அனுமதி கோரிய லோக் ஆயுக்தாவின் கடிதத்தை, கவர்னர் திருப்பி அனுப்பியுள்ளார். இதனால் ஜமீருக்கு தற்காலிக நிம்மதி கிடைத்துள்ளது.
பெங்களூரின் சாம்ராஜ்பேட் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஜமீர் அகமது கான். சித்தராமையா அமைச்சரவையில் வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்தார்.
இவர், 2005 -- 2018 வரையிலான காலகட்டத்தில் தன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது பற்றி, லோக் ஆயுக்தா விசாரணை நடத்தியது.
இதில், 25 கோடி ரூபாய்க்கு சொத்து குவித்தது தெரிந்தது. ஜமீர் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கேட்டு, கடந்த வாரம் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கு, பெங்களூரு லோக் ஆயுக்தா எஸ்.பி., - 1 சிவபிரகாஷ் தேவராஜ் கடிதம் எழுதியிருந்தார். கடிதம் எழுதிய மறுநாளே அவர் இடமாற்றமும் செய்யப்பட்டார்.
சிவகுமார் அமைச்சரவையில் சேர ஜமீர் முயற்சி செய்து வரும் நிலையில், கவர்னருக்கு எழுதப்பட்ட கடிதத்தால் பீதியில் இருந்தார்.
இந்நிலையில் லோக் ஆயுக்தா எழுதிய கடிதத்தை, கவர்னர் திருப்பி அனுப்பியுள்ளார்.
விசாரணை அறிக்கை உட்பட பெரும்பாலான ஆவணங்கள் கன்னடத்தில் இருப்பதால், அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சமர்ப்பிக்கும்படி கேட்டு கடிதம் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது. இதனால் ஜமீருக்கு தற்காலிக நிம்மதி கிடைத்து உள்ளது.
