ஜவுளி மற்றும் ஆடை கொள்கை அரசாணை வெளியீடு 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க இலக்கு
ஜவுளி மற்றும் ஆடை கொள்கை அரசாணை வெளியீடு 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க இலக்கு
ADDED : அக் 01, 2026 02:15 AM
பெங்களூரு: கர்நாடகாவில், 4,000 கோடி ரூபாய் நிதியுதவியுடன், ஜவுளி மற்றும் ஆடை கொள்கை தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஐந்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம் மற்றும் தொழில் துறை செயலர் ரோகிணி சிந்துாரி, நேற்று வெளியிட்ட அறிக்கை:
முதல்வர் சிவகுமாரின் விருப்பத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள ஜவுளி மற்றும் ஆடை கொள்கை, 2026 - 2031 தொடர்பாக அதிகாரபூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கொள்கையை செயல்படுத்தும் நோக்கில், 4,000 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
அடுத்த ஐந்தாண்டுகளில் 20,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கவும், ஐந்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜவுளி மற்றும் ஆடை தொழில்களை பெங்களூருக்கு அப்பால் விரிவுபடுத்தவும், பிராந்திய சமநிலையுடன் தொழில் வளர்ச்சியை அடையவும், மாநிலத்தில் 34 தாலுகாக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இங்கு ஜவுளி மற்றும் ஆடைகளுக்கான அலகுகள் நிறுவப்படும். புதிய கொள்கை முதல்முறையாக பட்டுநுால் உற்பத்திக்கும் ஆதரவு அளிக்கிறது.
கல்யாண கர்நாடகா பகுதியில் தொழில் துறை முதலீட்டை ஊக்குவிக்கவும், வேலைவாய்ப்பை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டு, கலபுரகியில் பிரதம மந்திரியின் ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆடை பூங்காவில் அமைய உள்ள நிறுவனங்களுக்கு, புதிய கொள்கை சிறப்பு சலுகைகள், தள்ளுபடிகள் வழங்கும்.
ஜவுளி உற்பத்தி, தொழில்நுட்ப ஜவுளிகள், கைத்தறிகள், பட்டு, திறன் மேம்பாட்டு, ஏற்றுமதி மற்றும் நிலையான உற்பத்தி ஆகியவற்றுக்கு, முன்னுரிமை அளிப்பதன் மூலம் கர்நாடகாவை உலகளாவிய ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தி மையமாக உருவாக்குவது புதிய கொள்கையின் நோக்கம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
