/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தாய்லாந்து - பெங்களூரு போதை கடத்தல் அதிகரிப்பு
/
தாய்லாந்து - பெங்களூரு போதை கடத்தல் அதிகரிப்பு
ADDED : டிச 11, 2025 05:47 AM
பெங்களூரு: தாய்லாந்து நாட்டில் இருந்து பெங்களூருக்கு அதிக போதை பொருள் கடத்தி வரப்படுவது அம்பலம் ஆகி உள்ளது.
பெங்களூரில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு போதை பொருள் புழக்கமும் அதிகரித்து விட்டது. போதை பொருள் விற்பனையில் வெளிநாட்டினரே அதிகம் ஈடுபடுகின்றனர். இவர்கள் சுற்றுலா விசாவில் பெங்களூரு வந்து குடியேறிவிட்டு, சட்டவிரோதமாக போதை பொருள் விற்பனை செய்து வருமானம் ஈட்டுகின்றனர். இவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து போதை பொருட்கள் விமானம் மூலம் வருகின்றன. குறிப்பாக, தாய்லாந்து நாட்டில் இருந்தே அதிகம் போதை பொருள் வருகிறது.
இது குறித்து, கெம்பேகவுடா விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த இரண்டு மாதங்களில், தாய்லாந்தில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு போதை பொருள் கடத்தி வந்த 26 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 112 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், பெருமளவு ஹைட்ரோ கஞ்சா எனும் உயர் ரக கஞ்சாவே கடத்தி வரப்பட்டது. மற்ற நாடுகளை விட, தாய்லாந்து நாட்டில் இருந்தே போதை பொருள் அதிகளவு கடத்தி வரப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

