ADDED : மே 06, 2026 11:46 PM

- நமது நிருபர் -:
சித்ரதுர்கா மாவட்டம், சுற்றுலாவுக்கு பெயர் பெற்றது. இங்கு ஏராளமான சுற்றுலா தலங்கள் இருக்கின்றன. சித்ரதுர்காவின் ஜோகிமட்டி மலைப்பகுதி பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். கடல் மட்டத்தில் இருந்து 3,800 அடி உயரத்தில் அமைந்து உள்ளது. இப்பகுதி உலர் நிலத்தின் ஊட்டி என அழைக்கப்படுகிறது.
இந்த மலைப்பகுதியை சுற்றி ஏராளமான காற்றாலைகள் உள்ளன. இவை பார்ப்பதற்கே வியப்பை ஏற்படுத்தும். இது, இந்தியாவின் முக்கியமான காற்றாலை மின் உற்பத்தி மையங்களில் ஒன்றாகும்.
இந்த பகுதியில் காரில் செல்லும் போது, விண்ணை முட்டும் அளவிலான காற்றாலைகளை ரசித்து கொண்டே செல்லலாம். அதுமட்டுமின்றி, காற்றாலை அமைந்துள்ள பகுதியில் சிறுத்தை, கரடி, நரி, பறவைகளையும் ரசித்து கொண்டே செல்லலாம். காற்றாலைகளின் அழகை சித்ரதுர்கா கோட்டை, வாணி விலாஸ் சாகர் அணை பகுதியில் இருந்து முழுமையாக ரசிக்கலாம். இது, கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
இப்பகுதிகளில் செல்வோர் தங்கள் வாகனங்களை சாலையோரமாக நிறுத்திவிட்டு, மொபைல் போன்கள் மூலம் படங்கள், வீடியோ எடுத்து மகிழ்கின்றனர்.
அதுமட்டுமின்றி, இந்த சாலையின் பல பகுதிகளில் ஏராளமான பழம், ஜூஸ் கடைகள் இருக்கின்றன. எனவே, செல்லும் வழியில் பழங்களை ருசித்து கொண்டே போகலாம். அதுபோல, இப்பகுதியில் புதிதாக பைக்கில் செல்வோருக்கு, புயல் வீசுவது போன்ற நினைப்பு உண்டாகும். அந்த அளவிற்கு காற்று வேகமாக வீசும். இங்கு வருவோர் ஆடு மல்லேஸ்வரா வன விலங்கு பூங்கா, பிரிட்டீஷ் பங்களா போன்றவற்றை ரசிக்கலாம்.
எப்படி செல்வது?
இந்த இடத்திற்கு பொது போக்குவரத்தான பஸ்சில் செல்வது உகந்தது அல்ல. பைக், கார் போன்ற தனியார் வாகனங்களில் செல்வதே சிறப்பு. அப்போது தான் நிறைய இடங்களில் வாகனங்களை நிறுத்தி, நிதானமாக சுற்றிப் பார்க்கலாம்.
