பி.ஜி., உரிமையாளர் கொலை 'கிரிக்கெட் பேட்'டால் கொன்ற கொடூரம்
பி.ஜி., உரிமையாளர் கொலை 'கிரிக்கெட் பேட்'டால் கொன்ற கொடூரம்
ADDED : ஜூன் 24, 2026 12:18 AM

ராமமூர்த்திநகர்: பி.ஜி., முன் நின்று மது குடிக்க எதிர்ப்பு தெரிவித்ததால், பி.ஜி., உரிமையாளரை 'கிரிக்கெட் பேட்'டால் அடித்து கொன்ற, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு கஸ்துாரிநகர் பிரதான சாலையில் வசித்தவர் மாதவ், 37. பி.ஜி., எனும் தங்கும் விடுதி உரிமையாளராக இருந்தார். நேற்று முன்தினம் இரவு, இவரது பி.ஜி., முன் இரண்டு வாலிபர்கள் மது குடித்தனர்.
அங்கு வந்த மாதவ், வாலிபர்களை கண்டித்து, 'இங்கிருந்து செல்லுங்கள்' என்றார். கோபம் அடைந்த வாலிபர்கள், பி.ஜி.,க்குள் நுழைந்து, குடிநீர் குழாயை திறந்து, தங்கள் கால்களை கழுவினர்.
அவர்களை விரட்டியடிக்க பி.ஜி.,க்குள் சென்று, கிரிக்கெட் மட்டையை மாதவ் எடுத்து வந்தார்.
மட்டையை அவரிடமிருந்து பறித்த வாலிபர்கள், மாதவை சரமாரியாக தாக்கி தப்பினர். தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சுருண்டு விழுந்து உயிருக்கு போராடினார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
மாதவ் குடும்பத்தினர் அளித்த புகாரில், ராமமூர்த்திநகர் போலீசார் விசாரித்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் படி, மாதவை கொலை செய்த ராகேஷ், 21, டான் பிரைட்சன், 20, ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
