ADDED : செப் 09, 2026 11:30 PM

- நமது நிருபர் -:
ஹாசன் மாவட்டம், சக்லேஷ்புரா தாலுகாவில், பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. மலைகள், அடர்ந்த வனங்கள், புராதன கோவில்கள் என, சுற்றுலா பயணியர் விரும்பும் அனைத்தும் இங்குள்ளன. அதே போல, ஹட்லு அருவியும் சுற்றுலா பயணியரை, சுண்டி இழுக்கிறது.
சக்லேஷ்புரா அருகில், ஹட்லு அருவி மேற்கு தொடர்ச்சியின், அடர்த்தியான வனப்பகுதி நடுவே உள்ளது. இதை பார்க்க விரும்பினால், அடர்ந்த வனம், காபி தோட்டங்களை கடந்து செல்ல வேண்டும்.
இரண்டு புறமும் பசுமையான காட்சிகளை ரசித்தபடி நடந்து செல்வது, புதிய அனுபவமாக இருக்கும். மழை காலத்தில் ரசிக்க வேண்டிய இடமாகும்.
எந்த பரபரப்பும் இல்லாத, நிசப்தமாக சூழ்நிலையில் அருவி அமைந்துள்ளது. தனிமையில் பொழுது போக்க விரும்புவோருக்கு, இது தகுந்த இடமாகும்.
இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். குடும்பத்துடன், நண்பர்களுடன் வருகின்றனர். காதலர்களும் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர்.
ஹட்லு அருவி, ஆறு கட்டங்களாக பாய்கிறது. இதை காண்பது மனதுக்கும், கண்களுக்கும் இனிமையான காட்சியாக இருக்கும். சாகச பிரியர்கள் மலையேற்றத்துக்காக வருகின்றனர்.
அருவியை காண வரும் சுற்றுலா பயணியர், வழிகாட்டியின் உதவியை பெறுவது நல்லது. ஏன் என்றால் இது அபாயமான வனப்பகுதியாகும்.
இந்த அருவியை காண, கட்டணம் ஏதும் இல்லை. காலை 7;00 மணி முதல், மாலை 5:30 மணி வரை அனுமதி உள்ளது. பெங்களூரில் இருந்து, 250 கி.மீ., தொலைவில், சக்லேஷ்புராவில் இருந்து, 23 கி.மீ., தொலைவில் இந்த அருவி உள்ளது.
மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், சக்லேஷ்புராவுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது.
அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்: மஞ்சராபாத் கோட்டை, பிசிலே காட் வியூ பாயின்ட், ஜேனுகல்லு குட்டா, மஞ்சேஹள்ளி அருவி.
