/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
தந்தைக்கு கோவில் கட்டிய அதிசய மகன்கள்
/
தந்தைக்கு கோவில் கட்டிய அதிசய மகன்கள்
ADDED : நவ 08, 2025 11:00 PM

இது கலியுகம். பெற்று வளர்த்த தாய், தந்தையை பராமரிப்போரை விட, வீதியில் தள்ளுவோரே அதிகம். சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்டு, பெற்றோரை வீட்டை விட்டு விரட்டுவதும், முதியோர் ஆசிரமத்தில் சேர்க்கும் சம்பவங்கள், கர்நாடகாவில் ஆங்காங்கே நடக்கின்றன. முதியோர் இல்லங்கள் அதிகரிக்க, இத்தகைய பிள்ளைகளே காரணம்.
தாய், தந்தையை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என, பல முறை நீதிமன்றங்கள் கண்டித்து, சாட்டையை சுழற்றியுள்ளன. ஆனால் இதை பலரும் பொருட்படுத்தியது இல்லை. சில நாட்களுக்கு முன்பும் சொத்துக்காக தாயை கொலை செய்த சம்பவமும் நடந்தது.
இத்தகைய நிலையில் தங்களுக்கு உயிர் கொடுத்த தந்தைக்கு கோவில் கட்டி, பூஜிக்கும் அபூர்வ மகன்கள் மாண்டியாவில் உள்ளனர். நம்புவது கஷ்டம் என்றாலும், இது உண்மை தான். தாய், தந்தை கண்ணுக்கு தெரியும் கடவுள் என்பவர். இதன்படி சகோதரர்கள் வாழ்கின்றனர்.
மாண்டியா மாவட்டம், மத்துார் தாலுகாவின், காடுகொத்தனஹள்ளி கிராமத்தில் வசித்தவர் மஞ்சுநாத். இவர் சுகாதாரத்துறையில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர். இவருக்கு மாதேஷ், கிரண் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களை மஞ்சுநாத் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தார். டாக்டருக்கு படிக்க வைத்தார். 2024ல் இவர் காலமானார்.
தங்களுக்கு உயிர் கொடுத்ததுடன், டாக்டருக்கு படிக்க வைத்து நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுத்த தந்தையை, மகன்கள் கடவுளாக மதித்தனர். மாதேஷும், கிரணும் மாண்டியா நகரில் தனியார் மருத்துவமனை ஒன்றில், இருவரும் டாக்டராக பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு சொந்த ஊரில் தந்தைக்கு கோவில் கட்ட வேண்டும் என்ற கனவிருந்தது.
சகோதரர்கள் காடுகொத்தனஹள்ளியில், 3 ஏக்கர் நிலம் வாங்கினர். இங்கு எட்டு லட்சம் ரூபாய் செலவில், தந்தை மஞ்சுநாத்துக்கு அழகான கோவில் கட்டியுள்ளனர். தினமும் இங்கு பூஜை நடக்கிறது. தந்தைக்கு கோவில் கட்டியது மட்டுமின்றி, அவரது பெயரில் நற்பணிகள் செய்கின்றனர்.
சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படும் கிராமங்களில், இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி, ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். மாதேஷ், கிரண் அபூர்வமான மகன்கள், தந்தை மீது இவர்கள் வைத்துள்ள பக்தி, மரியாதையை பலரும் பாராட்டியுள்ளனர்.
- நமது நிருபர் -

