/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடகாவின் பழமையான விநாயகர் கோவில்கள்
/
கர்நாடகாவின் பழமையான விநாயகர் கோவில்கள்
ADDED : ஆக 26, 2025 02:55 AM
பலமுரி விநாயகர் மாண்டியா நகரின், சங்கர நகரில் உள்ள பலமுரி விநாயகர் கோவில் மிகவும் சக்தி வாய்ந்தது. இக்கோவில் ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாற்று பிரசித்தி பெற்றதாகும். இங்கு குடிகொண்டுள்ள விநாயகருக்கு, 'புராண கணேசா' என்ற பெயர் உள்ளது.
இந்த கோவிலில் நடக்கும் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக இருக்கும். அதிகாலையில் இருந்தே, பூஜைகள், அபிஷேகங்களை காண பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருப்பர். விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டைகள், ரவா லட்டுகள் செய்து பிரசாதமாக விநியோகிப்பர்.
101 கணபதி மைசூரு நகரின், கணபதி கோவில் சாலையில், அகராவில் 101 விநாயகர் கோவில் அமைந்துள்ளது. மைசூரின் பழமையான கோவில்களில், இதுவும் ஒன்றாகும். நுாற்றுக்கணக்கான ஆண்டு பழமையான கோவிலாகும். கோவிலுக்குள் சிறிதும், பெரிதுமாக 101 விநாயகர் சிலைகள் இருப்பதால், 101 விநாயகர் கோவில் என்ற பெயர் ஏற்பட்டது.
கண் கவர் கலை வடிவத்துடன் தென்படுகிறது. மைசூரு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இருந்து, தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். விநாயகர் சதுர்த்தி நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர்.
தரிசன நேரம்: காலை 6:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை.
சசிவிலகு விநாயகர் பல்லாரி மாவட்டம், ஹொஸ்பேட்டில் உள்ள ஹம்பியில், சசிவிலகு விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இது ஆயிரக்கணக்கான ஆண்டு பழமையானதாகும். இங்குள்ள விநாயகர் சிலை ஒரே பாறைக்கல்லால் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. ஹம்பிக்கு வரும் சுற்றுலா பயணியர், இந்த விநாயகரை தரிசிக்க மறப்பது இல்லை.
பக்தர்கள் வேண்டும் வரம் அளிக்கும் கோவிலாகும். திருமணம் தடைபட்டவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுவோர், குழந்தை இல்லாத தம்பதியர், வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவிப்போர் இங்கு வந்து, விநாயகரை மனமுருகி வேண்டினால், வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். இக்கோவில் மிகவும் அமைதியான சூழலில் அமைந்துள்ளது.
கமண்டல கணபதி சிக்கமகளூரு மாவட்டம், கொப்பா தாலுகாவில் கமண்டல கணபதி கோவில் உள்ளது. கொப்பா பஸ் நிலையத்தில் இருந்து, 4 கி.மீ., தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. கோவிலில் உள்ள குளத்தில் ஆண்டு முழுதும் தண்ணீர் வற்றுவதே இல்லை. இந்த தீர்த்த குளத்தில் நீராடினால், சனி தோஷம் நீங்கும்.
சிறார்களுக்கு நீரை குடிக்க வைத்தால் கல்வியில் சிறந்து விளங்குவர். நினைவு சக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம். தாமரை வடிவில் குளம் அமைந்துள்ளதால், கமல தீர்த்தம் என்றும் அழைக்கின்றனர். இங்கு குடிகொண்டுள்ள கணபதிக்கு கமண்டல கணபதி என, பெயர் வந்தது.
தரிசன நேரம்: காலை 7:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை.
கண் திருஷ்டி கணபதி சிக்கபல்லாபூர் மாவட்டத்தின் நந்திமலை அருகில் கண் திருஷ்டி கணபதி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சோழர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். கண் திருஷ்டியால் அவதிப்படுவோர், இங்கு வந்து கணபதியை தரிசனம் செய்தால், திருஷ்டி விலகும் என்பது ஐதீகம். எனவே, கணபதிக்கு இந்த பெயர் வந்தது. பலரும் தங்களின் குழந்தைகளை அழைத்து வந்து, கணபதியை தரிசிக்க வைக்கின்றனர். அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர். விநாயகர் சதுர்த்தி நாளன்று கர்நாடகா மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர்.
தரிசன நேரம்: காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை
- நமது நிருபர் - .